பக்கம்:அன்பு மாலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அன்பு மாலை



சுற்றுவது போல உள்ள பேச்சு, என்றைக்கும் அடங்காது. முளையடித்த கயிற்றிலே பிணைத்த மாடு முதலிலே சர்வ சுதந்தரத்தோடு போனாலும் அந்தப் போக்குக்கு ஓர் ஒழுங்கு இருப்பதுபோல, பக்தன் எப்படிப் பேசினாலும் இறைவனுடைய சம்பந்தமாகவே இருக்கும். அவன் பேசுகிற கதைகளெல்லாம் புராண மாக இருக்கும். அவன் பாடுகிற இசைகளெல்லாம் இறைவனுடைய புகழாக அமையும். அவன் உண்ணுகிற உணவெல்லாம் ஆண்டவனுடைய பிரசாதமாக இருக்கும். அவன் கேட்கின்ற பாட்டெல்லாம் ஆண்டவனுடைய சங்கீர்த்தனமாக இருக்கும். அவன் தொடுகின்ற பொருளெல்லாம் இறைவனுடைய பிரசாதமாக இருக்கும். அவன் பார்க்கின்ற அழகெல்லாம் இறைவனுடைய அழகாக இருக்கும். " கண்ணை மூடிக்கொள்; வாயை மூடிக்கொள்; காலாலே நடக்காதே; ஓரிடத்தில் இருந்து பிராணாயாமம் பண்ணு " என்று சொன்னால் அப்படிச் செய்வது மிகவும் கஷ்டம். அதற்குப் பதிலாக, "வாய் திறந்து நன்றாகப் பேசு; ஆனால் ஆண்டவன் கதையைப் பேசு. காதாரச் சங்கீ தத்தைக் கேள்; ஆனால் இறைவன் புகழைக் கேள். வயிறு நிரம்பச் சாப்பிடு; ஆனால் சாதமாகச் சாப்பிடாமல் பிரசாதமாகச் சாப்பிடு. உடம்பு நிறையச் சந்தனத் தைப் பூசிக்கொள்: ஆனால் இறைவனுடைய அபிஷேகச் சந்தனத்தை பூசிக்கொள். தலை நிறைய மலரை வைத்துக் கொள்; ஆனால் இறைவனுக்கு அர்ச்சனை பண்ணி வைத்துக் கொள். நன்றாக நடமாடு, உலாத்து இறைவனுடைய திருக்கோயிலைப் பிரதட்சிணம் பண்ணி உலாத்து" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் நம்முடைய கருவிகளின் வசமாகிப் பலகாலும் திரியாமல், அவற்றை நம் வசப்படுத்தித் திரிய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/14&oldid=1303371" இலிருந்து மீள்விக்கப்பட்டது