பக்கம்:அன்பு மாலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவண்ணாமலை யோகி ஸ்ரீ ராம்சுரத்குமார்

அவர்களின் ஜயந்தி மலர்

ஜயந்தி மலர் என்றால் பிறந்த நாளின் தொடர்பாக வெளியிட்ட கதம்ப நூலோ என்ற ஐயம் தோன்றக் கூடும். பிறந்த நாள் அன்று மலர்ந்த நூல் என்பது இதன் பொருள். அறிவுச் செம்மல் திரு. கி. வா. ஜ. அவர்கள் திருவண்ணாமலையில் ஞான தீபமாக விளங்கும் ஓர் மகானின் 60-ஆம் ஆண்டு நிறைவு விழாவன்று 1-12-78 இல் அம்மகானுடைய வரலாற்றைப் பற்றித் தக்க ஆதாரங்களுடன் எழுதியுள்ள நூல் இது. வரலாறு உரைநடையில் 36 பக்கங்களில் அமைந்துள்ளது. இவரே துறவியைக் கண்டவுடனே உணர்ச்சி வயப்பட்டு வாய் மொழியாகப் பாடிய பல பாடல்கள் பதிவு செய்யப் பெற்றவையும் இந்நூலை உருவாக்கும் போது சேர்த்தவையும் (154 பாடல்கள்) இப்புத்தகத்தில் உள்ளன. பாடல்களின் போக்கு, கருத்தின் அமைப்பு எல்லாம் பழங்காலப் பக்திப்பாடல்களின் மாதிரியில் அமைந்துள்ளன. துறவிகள் போன்ற பெரியாரின் தரிசனத்தால் விளையும் நன்மைகள் பல. அவர்களைப் பற்றிய உயரிய பண்புகளை அறிவாரும் தூயராவர். இதற்கு இப்புத்தகம் ஓர் எடுத்துக்காட்டு.

----தினமணி : 18.9.1979.

ஸ்ரீ ரமண மகரிஷியினிடம் ஈடுபாடு கொண்டு திருவண்ணாமலையைத் தேடிவந்த மகான்களில் ஒருவர் யோகி ஸ்ரீ ராம்சுரத்குமார் அவர்கள். குழந்தை போன்ற கள்ளங்கபடற்ற சுபாவமுள்ளவரும், காஷாயம் தரிக்காமலேயே ஜீவன்முக்த நிலையில் இன்றும் அந்தத் தலத்தில் விளங்கி வருபவருமான இந்த மகாபுருஷரின் செயல்கள் நம் போன்ற சாதாரண மக்களுக்குச் சில சமயம் புரியாமல் இருந்தாலும், அழுக்குடை அணிந்தும் தூய்மையே உருவாக விளங்கும் இவரைத் தரிசித்த மாத்திரத்தில் ஓர் அமைதி நம் உள்ளத்துக்குக் கிட்டுகிறது எனத் திருவண்ணாமலை யோகி ஸ்ரீ ராம்சுரத்குமார் அவர்களின் ஜயந்தி மலர்' என்ற இதனை எழுதித் தந்துள்ள வாகீச கலாநிதி ஸ்ரீ கி. வா. ஜ. அவர்கள் பக்தி பரவசத்தால் கண்ணார நீர் மல்கிடத் தெரிவித்துள்ளார். இதனை மெய்யன்பர்கள் படித்து நலம் பெறுவார்கள் என்பது திண்ணம்.

----மஞ்சரி : 1-4-1979.

கிடைக்குமிடம்:

காந்தமலை, நார்ட்டன் முதல் தெரு, சென்ளை.28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/86&oldid=1460024" இலிருந்து மீள்விக்கப்பட்டது