பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அன்பு வெள்ளம்


பின்பு ஆற்றுப்படுத்தவும் அதற்கும் மேலாக உதவிகள் செய்ய வேண்டி, அன்பென்னும் பேராட்சியை நம் நெஞ்சங்களை ஆட்சி புரிய விட வேண்டும் என்பது.

நமது அறிவை அடக்கியாளும் வண்ணம், அன்பினை, நெஞ்ச அரியணையில் அமர்த்திடல் வேண்டும். அன்பினுக்கு வேலையாள் ஆக வேண்டும். அறிவு ஆகக் கூடியதா என்றால் சற்று கடினம் தான்். எனென்றால், தான்் வைத்ததே சட்டம் என்னும் தன் முனைப்பு கொண்டது நம் அறிவு. ஆகவே அன்பினுக்கு அறிவு, இணங்காது; அடிபணியாது. ஆனாலும் நாம் நம் அறிவினை, அன்பினுக்குக் கீழ்ப்படியவைக்க வேண்டும். கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். -

நாம் நம்முடைய வணிகத் துறையிலும் அன்பினை ஆட்சி புரியச் செய்தல் வேண்டும். அப்படிச் செய்தால் அலுவலகங்களில் இருப்பவர்களும் அன்பின் ஆற்றலை உணர்வர்; பின்பற்றுவர். அலுவலகங்களில் அருவருப்போடு வேலை செய்கிறவர்கள், அன்புச் சூழலில், அன்பின் ஒளியில் அன்பு உணர்வில் பணியாற்றுவர்.

அன்பால் அலுவலகப் பணிகள் மிகச் சீரிய முறையில் நடைபெறும். அலுவலம் உயர்நிலை அடையும். அலுவலகத்தில் பணி செய்பவர்களும் நல்ல பயனும் உயர்வும் பெறுவர்!

ஆகவே நாம் எல்லாரும் இனிமேல் அன்பின் சூழலில், அன்பில் இணைந்து காரியம் ஆற்றுவோம். அதற்குக் கைமேல் பலன் உண்டு! அதனால், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பாதையிலும், அன்பின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வருவோம். அதன் விளைவாக, நம் நினைவும் மொழியும் செயலும் அனைத்துமே அன்பில் மலர்ந்தனவாகவே அமையும்.

அரும்பொருள் அன்பே அனைத்துலகை ஆளும்
பெரும்பொருள் வையத்துப் பேறு.

நாம் அன்பின் பிள்ளைகள்

தெய்வத்தன்மையும் மனிதத் தன்மையும் இணைந்த கூட்டுறவே - கிறித்தவம். நாம் அன்பினில் பிறந்தோம். கடவுளின் அன்பின் இயல்பை நாம் பெற்றிருக்கிறோம்.