பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

21


அன்பின் அரவணைப்பில் இருக்கும் எவராலும் எவர்க்கும் எப்போதும் எந்தத் தீங்கும் விளைவதில்லை.

அன்பு என்னும் அருளுலகை விடுத்து அகல்பவர்கள் தீங்கு என்னும் பொல்லாத உலகில் புகல் அடைகிறார்கள் என்பது உறுதி.

அன்பினை நாம் கடைப்பிடித்தாலும் அன்பு நம்மில் நின்று நிலவினாலும் நம்முடைய அன்பு தனிப்பெரும் அழகுடன் திகழ்கிறது, மிகு கவர்ச்சி ஏற்று விளங்குகிறது.

1 யோவான் 4:16 உரை அதனை நன்கு புரிந்து கொள்ள உதவும் :

"நமக்குத் தெரியும் என்பதோடு நம்மைப் பொறுத்தமட்டில் கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பினைக் கொண்டுள்ளார் என்னும் நம்பிக்கை கொண்டுள்ளோம். கடவுள் அன்பாக இருக்கிறார்; எவர் ஒருவர் அன்பினைக் கைக் கொள்ளுகிறரோ அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறாரோ அவர் கடவுட் பற்றிலும் நிலைத்து நிற்கிறார்!" என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

அன்றாட வாழ்வில், வாழ்க்கையின் மற்றெந்தச் சட்ட திட்டங்களைவிட அன்பில் மட்டும் பெரும் பற்றினை வைத்திட வேண்டும் என்ற மெய்ம்மையியல்பினை நாம் அறிந்துள்ளோம். மனச்சான்றுப்படி நாம் அன்பென்னும் பெருவெளியில் வாழ்கிறோம்; அன்புப் பெருவெளியில் நயத்தக்க நாகரிக மாந்தர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்கிறோம். அதனால்தான்் நாம், அன்புப் பெருவெளியில் அன்புப் பிள்ளைகளாக அன்பு மக்கள் என்னும் ஒரு பெரிய இடத்தைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமிதப்படலாம்.

இவற்றினால் எல்லாம் நாம் உணர்த்தப்பட்டது, நாம் எல்லாம் அன்பு என்னும் மொழியினைக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்பின் எழுதாத சட்டத்திட்ட முறை - ஒழுங்கான முறைமை. அன்பென்னும் அந்த அற்புத உலகினை அரசோச்சும் செங்கோன்மையை அறிந்து தேர்ந்து தெளிந்து விளங்க வேண்டும் என்பதே.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு - குறள்-75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/25&oldid=1219158" இலிருந்து மீள்விக்கப்பட்டது