பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அன்பு வெள்ளம்


இதனையே மற்றொரு வகையாகச் சொன்னால் அன்பு என்பது தன்னலம் அற்றதாக இருத்தல் வேண்டும்; ஏனெனில் தன்னலம் என்பது படிற்றொழுக்கமாம் போலி நடிப்பினை உண்டாக்கச் செய்யும்.

அன்புலகில் நுழையத் தடை செய்யப்பட்டது தன்னலம். அன்புலகில் செல்ல வொட்டாமல் தடுத்து நிறுத்தப்படுவது தன்னலம். ஏன்? அன்பினைக் கீழே தள்ளி, அதன் இடத்தில் அமர்ந்து, அன்பின் உயர்வினை, மணிமகுடத்தைத் தட்டிக் கொள்ளத் தோள் தட்டி நிற்பது தன்னலம். தன்னலம் என்பது ஒரு கொள்ளைக்காரன். பழிபாவத்தினை அஞ்சாத கொள்ளைக்காரன்.

தன்னலம் மாந்தரை, பொய்வேடம் இட்டு நடிக்கச் செய்யும். நட்பினை முறிக்கும். இல்லறத்தைச் சீர்குலைக்கும். திரு அரங்குகளைப் பாழ்படுத்தும். அன்பின் கனியை அழிக்கும்.

மாந்தர் தம் வாழ்வில் தன்னலத்தை - அதன் விளைவுகளை அழித்து வெற்றி பெற வைக்க ஒரே ஓர் ஆற்றல்தான் உண்டு. அந்த ஆற்றல், புதிதான், புதுமையான அன்பு ஒன்றே!

இயல்பாக ஓர் ஆண் ஒரு பெண்ணைக் காதலிப்பது - அன்பு செலுத்துவது என்பது எதற்காக? அவன் நெஞ்ச வேட்கையைத் தணிப்பதற்காக! தன் வேட்கையைத் தணித்த பெண்ணுக்கு மகிழ்ச்சி தருவதற்காகவா? இல்லவே இல்லை! தன் ஆவல் தீர்த்துக் கொண்டால் போதும் என்பதுதான்் தவிர, அவள் அகம்புறம் இன்புற்றுத் திளைப்பதற்காக அன்று! அவள் இவனுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இசைந்து வரவில்லையேல் அன்புடன் அடங்கி நடக்கவில்லையேல், தன்னைப் பிடிக்கவில்லை என்று கருதி அவளை அழித்துவிடுவானேயன்றி நான் அவளுக்குப் பொருத்தமானவன் அல்லேன்; வேறு பொருத்தமுள்ள ஒருவருடனேனும் வாழ்ந்து போகட்டும் என்று அப் பெண்ணினைத் துணைவியை விட்டு வைக்கமாட்டான். இத்தகு அன்பைக் கொலைச்செய்யும் இரக்கமற்ற மானிடர்களும் மாந்த வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். இயற்கையான மானிட அன்பு என்பது அசட்டை செய்வது, காழ்ப்பு - பகைமை - பொறாமை கொள்வது மட்டுமல்ல கடைசியாகக் கொலை அளவுக்கும் மாறிவிடுகிறது.

சில திங்களுக்கு முன்பாக, கடலோர நகரங்கள் ஒன்றில் உள்ள அறமன்றம் ஒன்றினில் ஒரு குற்றவாளி கூறினான்:- அறவாணர் அவர்களே! என் மனைவியை உள்ளபடியே அன்புடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/58&oldid=1219735" இலிருந்து மீள்விக்கப்பட்டது