பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அன்பு வெள்ளம்


அந்த இனிமையான நிலையினைக் கணவன் தன்னுடனே உள்ளத்தில் கொண்டு செல்கிறார் அலுவலகத்துக்கு பிள்ளைகளும் பள்ளிக்குப் படிக்க வேண்டிய நூல்களோடு சுமந்து கொண்டு செல்கிறார்கள். அன்னையோ, அன்று முழுவதும் பாடிய வண்ணம் பணிகளைச் செய்து பெருமகிழ்ச்சி அடைகிறாள், தன் வீட்டில் நிலவிய இனிய சூழலை எண்ணி எண்ணி

அண்டை அயல் வீட்டார் வருகின்றார்கள், சற்று நேரம் அளவளாவிப் பேசிச் செல்வதற்காக! அவர்கள் வந்து பேசிய பின் அந்த அன்பு வாழும் இல்லத்தைவிட்டுத் தங்கள் வீட்டுக்கத் திரும்பிச் சென்றிட மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். காரணம் என்ன? அவர்கள் வீடு, பாழடைந்த வீடுபோல் காட்சியளிக்கிறது; அன்பு கொண்ட மக்கள் இல்லை அவர்கள் வீடுகளில்! அப்படிப்பட்ட வீடுகளில் இருப்பதைவிட இயேசு ஆண்டவர் சில சமயங்களில் தங்கியிருந்தாரே காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலப்பகுதி! அதுபோன்ற காட்டுக்குள் போய்விடலாமா என்றகூட ஏங்கு கிறார்கள்.

யோவான் 14:23ல் "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் உரையைக் கைக் கொள்வான்; அவனில் என் தந்தை அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாழ்ந்திருப்போம்” இப்படி இயேசு சொல்கிறார்.

இயேசுவின் இந்த உரையைக் கண்கூடாகக் காண்கின்ற இல்லமே அன்பு இல்லம். பிறந்தாலும் அப்படிப்பட்ட அன்பு இல்லத்தில்தான் குழந்தைகளாகப் பிறத்தல் வேண்டும். அன்பின் அருளாட்சி நடைபெறும் அப்படிப்பட்ட இல்லங்களில் அல்லவா சிறுவர்களும் சிறுமிகளும் ஓடி ஆடி விளையாடல் கூடும்; நடக்கவும் நல்லன பேசவும் முடியும்! அன்பாட்சி செய்கின்ற அப்படிப் பட்ட இல்லங்களில் ஆடிப்பாடி விளையாடிடும் குழந்தைகள், தாம் வளர்ந்த பின்பு வாழ்க்கை என்னும் மிகப் பெரிய விளையாட்டுகளிலும் விளையாடி வெற்றி கொள்ள முடியும்.

நம்முடைய எல்லா இல்லங்களுமே அன்பு இல்லங்களாக மாற முடியும். அப்படி அஃது ஒன்றும் கவிதையில்லை; அது மெய்பொருள் அன்று. எல்லாராலும் முடியாது என்பதற்கு. ஒவ்வொரு நாளும் அன்புடன் நடக்கும் ஒருவருடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கக் கூடியதுதான்! நடத்திக் காணக் கூடியது தான் அன்பு இல்லம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/78&oldid=1219520" இலிருந்து மீள்விக்கப்பட்டது