உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

5


மலர்களால் போர்த்திப் பொலிவெழச் செய்கின்றன. களி மண் பகுதியினையும், பாழ்பட்ட பகுதியினையும் கூட இயற்கை நிலத்துக்கு நல்கும் சிறப்பு உரிமையும் மாட்சியுமாக இணைந்து விளங்கும் ஆடை அணிகலன்களாக விளங்கி வனப்புமிக்கதாகச் செய்கின்றன, மலர்ந்து மாயும் அவ் வண்ண மலர்கள்!

அதுபோலவே, அன்பும் பண்பும் அற்ற பண்படாத மாந்தரின் நெஞ்சங்களைக் கூடப் பண்பட்டதாக மாற்றி அமைந்து அணி செய்கிறது அன்பு.

இயற்கை அன்பினால் பூம்பொழில்கள் தழைக்கின்றன. அதே அன்பினால் தான் அப் பூம்பொழில்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன; மணம் கமழ்கின்றன.

அவ் இறை அன்பினால்தான், பூத்தன அப்பூக்கள். ஒருசேரக் கொண்டுவந்து குவிக்கப் பெறுவதும் பின்னர் அவை, அழகுபடக் கண்ணைக் கவரும் வண்ண மாலைகளாகத் தொடுக்கப்படுவதும்; பூச்செண்டுகளாகக் கட்டப்படுவதும் அவை நம் உள்ளங்களைக் களிப்பில் ஆழ்த்துவதும் ஆகும்.

அன்புதான் நாம் வாழும் இல்லங்களை எழில் மயமர்க்குகிறது. அன்புதான், இல்லங்களில் நீக்கமற நிறைந்து உறைந்து மகிழ்ச்சி பொங்கும் இடமாக இல்லத்தை உயர்த்துக்கிறது.

அழகில் சிறந்தது - உயர்ந்தது அன்பு! அன்பு மிகமிக நுட்பமானது. நுண்மையும் மென்மையும் ஆனது.

வன்மையின் கைப்பட்டு நொடியில் உடைந்து தூளாகிவிடக் கூடியது அன்பு! எனினும் நம்மால் எதை எதைத் தாங்கிக் கொள்ள் முடியாது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோமோ அவற்றை யெல்லாம் தாங்கிக் கொள்ளும் வலிமையும் துணிவும் வாய்ந்ததாக விளங்குவது அன்பு!

அன்பினால் ஆளப் பெற்று, அவ் அன்பையே தனதாக்கிக் கொண்டு அந்த அன்பையே உள்ளம், உரை, செயல் என்று கொண்ட மாந்தர் எவருமே எத்தகைய ஈகத்திலும் - தன் மறுப்புக் செயல்களாலும் சிறுகவும் இல்லை; குறுகவும் இல்லை.

அருவருக்கத்தக்க குறுக்கை (சிலுவை)யினையும் அழகு படுத்தியது அன்புதான்!

இருளும் அச்சமும் நிறைந்த கல்லறையைச் சாவைத் தடுத்து நிறுத்திய அக் கல்லறையைக் கூட அழகும் ஒளியும் பொலியச் செய்தது அன்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/9&oldid=1218967" இலிருந்து மீள்விக்கப்பட்டது