பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை உரை : த. கோவேந்தன்

103

தோழி! “நீலமணி போன்ற கழுத்தையும் அழகிய பீலியாகிய சிறந்த தோகையையுமுடைய மயில்கள் இனிய குரலை உடையனவாய் நெருங்கி, மென்மையான தாளத்துக்கு ஏற்ப ஆடும் தகுதியான அழகின் சிறப்பைப் போன்று நீ தோழியருடன் கூடி, கண்ணை ஒத்த இதழ்களை உடைய குளிர்ந்த குவளை மலரின் குறிய மாலையைச் செருகிய நின் பலவாய கூந்தல் பரக்க, ஆழமான நீரையுடைய நீண்ட சுனையின் ஆடாமல் வருந்திய மனத்தை உடையவளாய்த் தனிமை கொண்டு உள்ளாய். இத் தன்மையான நின்மேனி வேறுபாட்டைப் பார்த்து நம் அன்னை அதன் காரணம் யாது? என்று வினவுவாள். பொருந்திய மலையினின்றும் வரும் நீரையுடைய அருவியானது நெற்றிப்பட்டத்தைச் சூடிய யானையின் மீது கட்டப்பட்ட அசையும் வெண்துகில் கொடியை ஒப்பத் தோன்றும் உச்சி உயர்ந்த மலையை உடைய தலைவன், நமக்கு உண்டாக்கிய நோயை, அந்தோ, நான் எதனால் நிகழ்ந்தது எனக் கூறுவேன்?” என்று தோழி தலைவியைப் பார்த்துப் பகர்ந்தாள்.

451. உயிருடன் இறேன்

பாம்புடை விடர பணி நிர் இட்டுத் துறைத்
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து
பைங் கண வல்லியம் கல் அளைச் செறிய
முருக்கு அரும்பு அன்னவள் உகிர் வியப் பிணவு
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே;
எவன்கொல்? - வாழி, தோழி! - நம் இடை முலைச்
சுணங்கு அணி முற்றத்து ஆம் போலவும்
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே!

--வெள்ளி வீதியார் அக: 362