பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

யாவரும் புகழும் அறிவை உற்ற ஒப்பில்லாதவனே! அங்ஙனம் இவ் ஊரார் வேறாக உணராமல், உண்மையாக உணர்வாராயின், களவொழுக்கத்தை அவர் அறிந்தார் என்று இவள் உயிர் வாழ மாட்டாள் யானும் உயிர் வாழ மாட்டேன்! ஆதலால் நின் காரியத்தைப் பலர்க்குச் சொல்லி அவர் உடன்பட்ட பின்பு மலர்கள் பூக்கின்ற விடியற் காலத்தில் வந்து மணந்து கொள்பவரை விரும்புகின்றேன் அதற்குக் காரணம் யாது என்றால், அப்போது புதியவன் போல் நீ வரும் வருகையையும், இவள் மனத்தில் தோன்றிய வெட்கத்தால் ஒடுங்கியிருக்கும் ஒடுக்கத்தையும் யான் காணல் வேண்டும் என்பதேயாகும் என்றாள் தோழி

475 அளிபெற நந்தும் ஆய்நுதற் கவின்

வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல்
விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா,
மறம் மிது வேழம், தன் மாறுகொள் மைந்தினான்,
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல,
உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன,
அயம் நந்தி அணி பெற, அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!

மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்தபின்,
இறை வளை நெகிழ்பு ஒட, ஏற்பவும் ஒல்லும்மன்
அயல் அலர் தூற்றலின், ஆய்நலம் இழந்த கண்;
கயல் உமிழ் நீர் போல, கண் பணி கலுழாக்கால்?

இனிய செய்து அகன்று, நீ இன்னாதார் துறத்தலின்,
பணி, இவள் படர் எனப் பரவாமை ஒல்லும்மன்
ஊர் அலர் தூற்றலின், ஒளி ஒடி, நறு நுதல்
பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்?

‘அஞ்சல் என்று அகன்று, நீ அருளாது துறத்தலின்,
நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன்
நனவினால் நலம் வாட, நலிந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவுற்று, கங்குலும் அரற்றாக்கால்?
என ஆங்கு