பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

எல்லா எவன் செய்வாம்
பூக்குழாய் செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல்
கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல், ஈங்கு ஆக
இருந்தாயோ என்று ஆங்கு இற.

அவன் நின் திருந்துஅடிமேல் வீழ்ந்து இரக்கும்,
நோய் தீர்க்கும்
மருந்து நீ ஆகுதலான்.
இன்னும், கடம் பூண்டு, ஒருகால் நீ வந்ததை, உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு.

இஃதோ அடங்கக் கேள்:
நின்னொடு சூழுங்கால், நீயும் நிலம் கிளையா,
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன்-
தன்னொடு நின்று விடு. - கலி 63

தான் மகளிரைத் தொழுவதைப் பிறர் காண்பாரே என்று ஆராய்ச்சி இல்லாதவன், நாம் பார்க்கும் போது நம்மை நோக்கி வணங்குவான் இங்ஙனம் தொழுவது நமக்கும் பழியைத் தூற்றும் என்று எண்ணித் தொழுதலை விலக்கிப் போகவிடும் காலத்து, அந்தப் போக்குத் தனக்குச் செய்யும் வருத்தத்தை எண்ணிப் போகாதிருப்பான். ஆதலால், இனி நாம் அவனை நம்மிடம் வராதபடி காக்கும் காலமன்று, ஏடி! இங்ஙனம் காத்தற்கு அரிய நிலைமை கண்டு மேல் என்ன செய்வோம், கூறுவாய்!

அழகிய குழையை உடையவளே! வருந்தும் அவனிடத்து நீ கூடும் கூட்டத்தை யான் விரும்பி உன்னைப் பல முறையும் அழைத்து, அழைத்துக் கொண்டு விடுவதைப் போல் செய்வேன். அவனுக்கு அது தோன்றாதபடி நீ என் தோள் மீது கரும்பு எழுதும் குழம்பிற்கு என்று ஒரு காரணத்தை அவனிடம் சொல்லிவிட்டு போவேன். நீ அங்கு வந்து, இந்த இடமே உனக்கு இருப்பிடமாய் எண்ணி இருந்து விட்டாயோ என்று என்னைத் தேடி வந்தது போல் அங்கிருந்து குறியிடத்துக்குப் போ! அப்போது, அவன் காம நோய் தீர்க்கும் மருந்து நீ, ஆதலால் உன் அடிமீது விழுந்து நின்னை இரப்பான்.