பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

கனிகளும், இணைந்து விளைந்த கள்ளானது தேனடை உடைந்து ஊற்றிய தேனுடன் கலந்து திரண்டிருக்கையில், அதனை நீரென்று மாறாகக் கருதி உண்ட மயில் மயங்கி ஆடும் எப்படியெனில், இன்னிசை ஒலிக்க, கழைக்கூத்தில் கயிற்றிலாடும் பெண் தாளத்திற்கு ஆற்றாது இப்படியும் அப்படியும் தளர்ந்தாடுதல் போல் கள்ளுண்ட களிப்பால் அசைந்தாடும் சாரலினையுடையது அத் தலைவன் குன்று அது மட்டுமன்று, வானகத்தை அளாவும் முடிகளில் செழித்த செங்காந்தள் பூக்கள் சூடிய மகளிர் பரந்து விளையாடுதலால் சிறிது கசங்கிக் கீழ் நிலத்தில் அழகிய கச்சுகள் வீழ்ந்து கிடப்பதைப் போல் கிடந்து பொலிவு பெற்று விளங்குவது மாகிய அழகிய குன்றின் தலைவன் அவன். இவளது உள்ளத்து உணர்வினை உணர்ந்து திருமணம் புரிந்து இல்லறம் நிகழ்த்த எண்ணி இருந்தனன்

பலரும் விருந்துண்ணும் இல்லம் மேலும் பொலிவு பெற நெய்மிகு அடிசிலை நீ இடுகையில் உயர்ந்தோர் சுற்றமுடன் விருந்தயர்வர். எஞ்சிய அடிசிலை எனக்களிக்க உண்ணுதல் உயர்ந்ததே. அத்தகைய இல்லறம் நமக்குத் துணையாகுக என்று தெளிவித்து, முருகனை வாழ்த்தி, வஞ்சினம் கூறி களிறுதரு புணர்ச்சியை, அன்றைய பகலெல்லாம் பூஞ்சோலையில் கழித்தனர் அப்போது, பல கதிர் ஞாயிறு ஏழு குதிரை தேரில் சென்று மலைவாயில் மறைந்தனன்

தலைவன் பிரிதல்

அந்தி மாலையில், மான்களின் கூட்டம் மரத்தடியில் வந்து கூடின. பசுக்களின் திரள் கன்றுகளை அழைக்கும் குரலுடன் பட்டிகளில் வந்து நிரம்பின. ஊதுகின்ற கொம்பு போன்ற ஒசையுடைய அன்றில், பெரிய பனை மரத்தின் உள் மடலில் இருந்து அகவின பாம்பு உணவெடுக்கத் தன் மாணிக்கத்தை உமிழ்ந்தன இடையர்கள் பல இடங்களில் நின்று ஆம்பல் பண்ணினை இசைக்கத் தொடங்கினர்

ஆம்பல் பூக்கள் மெல்ல இதழ் விரித்தன அந்தணர்கள் அந்தி சந்திகளை முடித்தனர் செல்வவளம் மிக்க வீடுகளில்