பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

அடைய, வில்லையுடைய படையுடைய பசும்பூண் பாண்டியனின் களிற்றின் மீது எடுக்கப்பட்ட கொடியைப் போன்று அழகுண்டாக இழியும் அருவிகள் பொருந்திய மலையின் சாரல் அச் சாரலில் உள்ள அச்சம் தரும் தெய்வப் பெண் களைப் போன்று பெறுவதற்கு அரியவள் நம் காதல் தலைவி கரு மணலைப் போன்ற கூந்தலையும் நீலமலர் போன்ற ஒளி பொருந்திய முகத்தில் சுழலும் கண்ணையும், வண்டுகள் விரும்பும் முல்லை அரும்பை வரிசையாய் வைத்தது போன்ற பல்லினையும், புன்னகையால் சிறந்து விளங்கும் நன்மையுடைய பவளம் போன்ற வாயையும் உடையவளாய், வளை யல் விளங்கக் கையை வீசி, காற்றில் அசையும் தளிரைப் போன்று நடுங்கி வந்தாள். நம் நோயான வருத்தம் நீங்க இடைவிடாது என்னைத் தழுவிக் கொண்டாள்” என்று இரவு வந்து மீண்ட தலைவன் தன் நெஞ்சிற்குள் மகிழ்ந்து கூறிக் கொண்டான்.


411. இரவில் வரவேண்டா

யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
ஆன்றல் வேண்டும் - வான் தோய் வெற்ப!
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்-
கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில் புறங் காப்ப
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங்கண்
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்;
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?

- கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் அக 168

“வானைத் தீண்டும்படி உயர்ந்த மலை நாட்டை உற்ற எம் தலைவ! நீ எம்மிடம் வரும் இரவுக்காலத்தை உம்முடன்