பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


பெருங்கல் நாட! பிரிதி ஆயின்
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழைஅணி நெடுந்தேர் களிறொடு என்றும்
மழைசுரந்தன்ன ஈகை, வண்மகிழ்
கழல்தொடித் தடக்கை, கலிமான் நள்ளி
நளிமுகை உடைந்த நறுங்கார் அடுக்கத்து
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்
மென்பிணி முகைஅவிழ்ந்து அலர்ந்த
தண்கமழ் புதுமலர் நாறும் நறுநுதற்கே?

- கபிலர் அக 238

“மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னியிருத்தல் அறியப்படாதவாறு நெருங்கியுள்ள காடு அதில் கன்றை ஈன்று காவற்பட்ட வேட்கையுடைய பெண்புலி பசியால் வருந்தியது அதற்குப் பனம் துண்டைப் போன்ற பிடரியையுடைய பெரிய ஆண்புலி, நள்ளிரவில், இளைய மானினை உணவாகக் கொணர்ந்து தருவதற்கு விரும்பிப் புறப்பட்டது அது மடப்பம் பொருந்திய கண்ணைப் பெற்ற காட்டுப் பசு தொலைவில் நின்று அலற, வளைந்த கொம்பையுடைய அக் காட்டுப் பசுவின் ஆணை காட்டில் வலப்பக்கமாக விழும்படி கொன்றது அங்குள்ள பெரிய மலையை அடுத்துள்ள அகன்ற பாறைகள் இரத்தத்தால் செந்நிறம் அடையும்படி செய்து இழுத்துக் கொண்டு போனது இத் தன்மையுடைய பெருமலை பொருந்திய நாட்டை உடையவனே! நீ இவளைப் பிரிந்து செல்வாயானால்,

இரந்து வந்த பாணர் முதலியவர்க்கு நள்ளி என்ற வள்ளல் அணிகள் அணியப் பெற்ற உயர்ந்த தேரை ஆண் யானையுடன் என்றும் வானம் மழை பொழிவதைப் போல் அளிக்கும் ஈகையையும் மகிழ்ச்சியையும் உடையவன்; சுழல விடப்பட்ட தொடியை உடைய பெரிய கையினன், செருக்குடைய குதிரைகளை உடையவன் இத்தகைய அவனது செறிந்த அரும்புகள் மலர்ந்த கரிய பக்க மலைகளில் பனை மரத்தின் அடிப்பக்கத்தில் நிலை பெற்றிருக்கும், காந்தளின் மெல்லிய அரும்புகள் இதழ் விரிந்து மலர்ந்து, மணம் கமழும் புதிய மலர் போல், நறுமணம் கமழும் நெற்றியுடைய தலைவியை இறவாது காப்பதற்கு, மருந்தும் பெற்றுள்ளாயோ!