பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

77




ஏற்றுஇமில் கயிற்றின், எழில்வந்து துயல்வர
இல்வந்து நின்றோற் கண்டனள், அன்னை!
வல்லே என்முகம் நோக்கி
‘நல்லை மன்'என நகூஉப் பெயர்ந்தோளே.

- கபிலர் அக 248

“தோழியே! நேற்று இரவு நிகழ்ந்த சிரிப்புக்கு இடமான ஒரு நிகழ்ச்சியைக் கேள்:

ஒர் அஞ்சாமையுடைய ஆண் பன்றி, வேட்டையாடுவதில் வல்ல நாயைக் கடிந்து விலக்கி, வேட்டையாடும் வேடர்கள் நெருங்கி வருவதையும் போக்கி, வன்மைமிக்க குட்டிகளை அனைத்துக் கொண்டு பெண் பன்றி தன் சுற்றத்துடன் அப்புறம் போகச் செய்தது; காட்டினின்று வெளிவந்தது அக் காட்டின் வாயிலாகிய அரிய முடுக்கில் வேட்டையாடுபவரை எதிர் நோக்கி நின்றது அதனை வேடன் ஒருவன் அருகில் போய் நின்று பார்த்தான். அதனைக் கொல்லுதற்குத் தொடுத்த அம்பைத் தொடுக்காமல் நின்றான் “பகைவர் படையைத் தடுப்பதற்குச் செல்லும் ஆற்றல் வாய்ந்த தன் படை மறவர் புறங்காட்டி ஓடிவிடத் தான் மட்டும் புறங்கொடுத்து ஓடாமல் பகைவர் வரும் வழியில் தடுத்து நிற்கும், எம் வலிய வீரனைப் போல் இப்பன்றி உள்ளது என எண்ணி வியந்து, அதன் மீது அம்பு எய்யாமல் திரும்பிப் போனான் இத்தகைய இடமான மலை பொருந்திய நாட்டினை உடையவன் நம் தலைவன்.

அவன், நெருங்கிய புதர்கள் பற்றி இழுத்தலால் மாலையின் புரி அறுபட்டு விழுவதால், திரண்ட மலர்கள் உதிரும் மாலையானது காளையின் முதுகில் கிடக்கும் கயிற்றைப் போன்று அழகுடன் அசைய, நம் இல்லத்தில் வந்து நின்றான் அவ்வாறு வந்து நின்றவனை, நம் தாய் கண்டாள் பின் விரைவாக என் முகத்தைப் பார்த்தாள் பார்த்து என்னை நோக்கி, ‘நீ மிகவும் நல்லவள்!’ என்று கூறினள் தலைவன் சிரித்தபடி அப்பால் சென்றான் என்ன செய்வோம்!” என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.