பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

பாலை - முல்லை என்று கார்கானாற்றாய்த் திசைமாறி சிறகுகின்றன. அக நானுற்றிலோ களிற்றுயானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவையென முப் பிரிவாகி ஒற்றை எண் 1,3,5,7,9 எனப் பாலைப் பாடல்களும் 4, 14, 24, 34 என 4 - இல் முடியும் முல்லைப் பாடல்களும், 6, 16, 26, 36 என 6-இல் முடியும் பாடல்கள் மருதப் பாடல்களாகவும், 10, 20, 30, 40 - எண் பாடல்கள் நெய்தலாகவும் எண் அடிப்படையில் கலம்பகமாகவே உள்ளன. பிற்கால நூலான கலைத்தொகையோ பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் எனப் பூமஞ்சரியாக விளங்குகின்றன

சங்க நூல்களைப் பதிப்பித்த அறிஞர் பெருந்தகைகளும் நூலாராய்ச்சி வல்லுநர்களும் இம் முறை மாறி நிற்பவற்றை ஏனோ எண்ணவில்லை. பேராசிரியர் சு வையாபுரிப் பிள்ளை துணிந்து சங்கப் பாக்களை ஆசிரியர் அகவரிசையில் முறைப்படுத்தியது போல - சீரிய கூரிய செம்மொழி அறிஞர் பேரா. வ. சுப மாணிக்கனார் தம் முனைவர் ஆய்வேடான ‘தமிழ்க் காதல்’ ஏட்டில் இம் முறை மாற்றம் பற்றிச் சுட்டிக் காட்டியது பற்றி நேரில் வினவுகையில் நீங்கள் முறைப்படுத்துங்களேன் என்று 1962-லேயே என்னிடம் கூறினார். அவ் வகையில் என்னை முழுமையாகச் செயல்படச் செய்தவர் தோழர் ம. இல. தங்கப்பா.

ஒவ்வொரு திணைக்கும் நூற்பெயர் - ஆசிரியர் பெயர் பாட்டின் கீழ் தந்துள்ளேன். முதலில் வரிசை எண்ணும் ஒவ்வொரு திணைக்கும் தனித்துத் தந்துள்ளேன். பாடல் ஆசிரியர் பெயர் தெரியாதவிடத்து பாட்டுக்கடியில் உவமையாலோ அருந்தொடராலோ பாடினார் பெயர் சூட்டாமல் ‘பாடினார்?’ என்று வினாக்குறி இட்டுள்ளேன். நற்றிணையில் மட்டுமே பாடினார் பெயர் தெரியாத பாடல்கள் மிக்குள்ளன.

நெடுநாளைய என் திட்டத்தை செயல்படுத்தப் போய் நான் இழந்த பேரிழப்பைச் சொல்லி மாளாது அதாவது என் அன்புக்குரிய தோழர் தங்கப்பாவுடன் மடல் தொடர்புகளை இழந்தேன். இப் பணியில் ஒரு வெறியனைப் போல் இருந்ததால் அவரிடமிருந்து ஆறுமடல்களை இழந்தேன். இது ஒரு தனி மாந்தனுக்கு ஏற்பட்ட இழப்பன்று. தமிழுக்கும் நாட்டிற்கும் உலகுக்கும் ஏற்பட்ட இழப்பாகும். அவ்விழப்பை என் தொகை வகை - உரைப் பணி ஈடு செய்யுமா என்பது ஐயமே. என் வருவாயையும் இழந்தேன். அது எனக்குப் பேரிழப்பில்லை. நண்பரின் வாழ்வியக்க எண்ணங்களை மடலாகப் பெறாமையே ஈடிலாப் பேரிழப்பு.