பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி429. என் செய்வோம் யாம்?இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து,
வாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் தண்கமழ்சோலைப்
பெருவரை அடுக்கத்து ஒருவேல் ஏந்தி
தனியன் வருதல் அவனும் அஞ்சான்
பணிவார் கண்ணேன் ஆகி, நோய்அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்
தொழில்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில்மறந் தனளே?

- நக்கண்ணையார் அக 252

“தோழியே, கேள்! தன்னால் எய்யப்படும் விலங்குகள் இடப்பக்கத்தில் விழுவதை அறியாத வெற்றி பொருந்திய வேட்டையை யுடைய புலியானது நடுங்கிட ஆளி பாய்ந்து, உயர்ந்த நெற்றியையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்மையான கொம்பைப் பறிக்கும் அத்தன்மை வாய்ந்த இடமான குளிர்ந்த மணம் கமழும் சோலை பொருந்திய மலையின் சாரல், அதில்! வேல் ஒன்றை மட்டும் துணையாய்க் கொண்டு வரத் தலைவனும் அஞ்சவில்லை நீர் வடியும் கண்ணை உடையேனாகிப் பிரிவுத் துன்பம் வருத்தயானும் ஆற்றேன். கடுமையர்ன காவலை மேற்கொண்ட நம் அன்னையும், இண்டையின் மலர் உதிரும் படி, பெய்யும் தொழிலையுடைய முகில் நீரினைச் சொரியும் நள்ளிரவில், வீசும் அலைகளின் துளிகள் பரவும் சிறிய கரை யைப் பெற்ற குளத்தைக் காவல் செய்பவனைப் போன்று, காவலை மேற்கொண்டு உறங்க மறந்து விட்டாள்! யாம் என்ன செய்வோம்” எனத் தலைவி கூறினாள்.