பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

95


“நெஞ்சே! நம்மை இவ்வாறு வருந்திய நம் காதலி, இடி போன்ற ஒலியையுடைய ஆண் யானைகள் பொருந்திய வாள்கள் பின்னிய போரில், விளங்கும் வேலை யுடைய படையையும் தேரையும் உடையவன், திதியன் என்பவன், அவனது மலையினின்று வரும் அருவி விழும் மரங்கள் நெருங்கிய காட்டில், இளம்பிறை போன்ற கொம்பையும் அஞ்சாமையும் உடைய பன்றியினது ஊனைத் தின்ற புலிகள் கூடி முழங்கும் பக்க மலையையும் உச்சிப் பாறையில் உள்ள இனிய தேனை எடுக்கும் குறவர்களும் ஏறற்கு அரிய பொதிய மலையைப் போல் பெறுவதற்கு அருமையானவள் ஆவாள் அதனை உணராது விளங்கும் கதிரவனின் ஒளி மறைந்திட முகில் வானத்தில் பரவ, மின்னல் பிளந்திட மிக்க மழையைப் பெய்த நள்ளிரவில் காமம் வருத்தி அலைத்திட மலை உச்சி யினின்று கீழே விழுந்து இறப்பவர் போல் அச்சம் ஏற்பட நடுங்கிக் கோலால் அடிக்கப்பட்ட பாம்பைப் போன்று வேறே துணையில்லாமல் வாட்டம் அடைவாயோ!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறினான் தலைவன்

444. அவன் மார்பை நம் மார்பில் அடக்குவோம்


வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர்
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைந்தலை இடறி, பானாள்
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி
துணி கண் அகல அளைஇ கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின்
இலங்கு வளை நெகிழ, பரந்து படா அலைப்ப, யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு
அடக்குவம்மன்னோ - தோழி! - மடப் பிடி
மழைதவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று
கழை நின் யாக்கை விழை களிறு தைவர
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே!

- மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் அக 328