பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

171


துயரம் செய்து நம் அருளார் ஆயினும் - அறாஅலியரோ அவருடைக் கேண்மை! அளி இன்மையின் அவண் உறை முனைஇ, வாரற்கதில்ல - தோழி - கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை அகமடல் சேக்கும் துறைவன் இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!

- குன்றியனார் அக 40 தோழி கடற்கரைச் சோலையைச் சார்ந்துள்ள கழியில் வரிசையாய் உள்ள மலர்கள் குவியவும்: நீல நிறம் கொண்ட கடல் ஒலி மிக்கு ஒலிக்கும் மீனை உண்ணும் மென்மையான இறகையுடைய பறவைக் கூட்டம் திரண்ட பெரிய புன்னை மரத்தில் உள்ள கூடுகளைச் சேரும். அங்கும் இங்கும் அலை யும் வண்டுகள் ஒலிக்கும் இப்படி யாவும் தம் இடங்களில் போய்த் தங்கும் காலமான மாலைப் பொழுதில், தாழைச் செடிகள் தளர்ந்து அசைந்து, பிரிந்துள்ளார் வருந்த வந்த கீழைக் காற்றால் மிகுந்த துன்பம் கொண்ட அழகிய நெஞ்சம் செயலிழந்து வருந்தும் நமக்குப் பிரிவுத் துன்பத்தைச் செய்து சென்றவர் மீண்டு வந்து அருள் செய்யாரானாலும், அவரது நட்பு நமக்கு நீங்காதிருப்பதாகும் வயலில் வெண்மையான நெல்லை அரிபவரின் பின்பு நின்றொலிக்கும் பறை ஒலியைக் கேட்டு அஞ்சிய நீண்ட கால்களைக் கொண்ட நாரை செறிந்த மூட்டுவாயையுடைய கொம்பைப் போல் ஒலித்துப் பனை மரத்தின் மடலில் தங்கும். இத்தகைய கடல்துறையை உடைய தலைவனின் இனிய துயிலுக்குரிய மார்பின் பொருட்டுச் சென்ற என் நெஞ்சம் அவர் அருள் செய்யவில்லை என்று அங்குத் தங்குதலை வெறுத்து விட்டு இங்கு என்னிடம் வாராதிருப்பதாகுக என்று தலைவி தோழியிடம் கூறினாள்

274. பாண, தலைவியின் துன்பத்தைச் சொல்

கடல்பாடு அவிந்து தோணி நீங்கி, நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்,