பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


இருந்த இடத்தினின்றும் எழுந்திருந்து போய் மறைபவனின் நெஞ்சு குவிவது போன்று இலைகள் யாவும் குவிகின்றன இங்ங்ணம் நிகழ வரு கின்ற மாலையே, நீ நான்கு திசைகளிலும் நடுக்கம் உண்டாக ஊழியின் முடிவுக் காலத்தில் கூற்றுவன், செக்கர் வானில் தோன்றிய முனையையுடைய பிறையைத் தனக்குப் பல்லாகக் கொண்டு, பல உயிர்களையும் ஒருசேரக் கொள்வதற்கு நகைத்தாற் போல் அஞ்சத் தக்க கடுமையான மாலையாய் விளங்குகிறாய்

இத்தகைய கொடிய நீ என் நெஞ்சத்தைத் தம்மிடத்தே கொண்டு நீங்கிய தலைவர் எனக்குத் துணையாகாத காலத் தில், வெள்ளத்தில் சிக்கிக் கரையேற மாட்டாத மானின் மார்பைப் பார்த்து அம்பை எய்யும் கொடியவனைப் போல் துன்பத்தில் ஆழ்ந்திருந்த எனக்கு மேலும் துன்பத்தை உண்டாக்க வந்தாயோ?

இத்தகைய கொடிய நீ, அருளற்ற காதலர் என்னை விட்டு நீங்கி அருளாமல் இருக்கும் காலத்தை நோக்கிப் போரில் தோற்றிருந்தவர்களை அவர்கள் அடைந்த தோல்வியை இகழ்ந்து சிரிப்பாரைப் போல், பொறுத்துக் கொள்ள இயலாது வருத்தம் அடைந்த என்னை வருத்துதற்கு வந்தாயோ? இத்தகைய கொடிய நீ, எனக்குப் பற்றுக் கோடான தலைவர் என் வருத்தத்தைப் போக்காத பொழுதில், முன்னமே வெந்துள்ள புண்ணில் மேலும் ஒரு வேலைக் கொண்டு சொருகுவாரைப் போன்று உடல் வாடுதற்குக் காரணமான காம நோயால் அழுந்தும் என்னை நினைத்து, இருக்கும் அறிவையும் கலங்கச் செய்ய நினைத்தாயோ?

என அவள் கூறும்படியாய் ஆற்றுவதற்கு இடம் இல்லையாக வருத்தும் பொல் லாங்கே செய்யும் மாலைக் காலத்தில் வெறுப்புக் கொண்ட வருத்தம் நீங்கும்படி காதலர் விரைந்து வந்தனர், ஆதலால் அம் மாலை இரவுக் காலத்தில் சென்று ஒளித்தது நான்கு படை யால் இளைத்த மன்னன், அவன் இளைத்த சமயத்தில் அவன் மீது வந்த பகையானது, அந்தப் பகையை விரைவாகப் போக்கி நீங்காது நின்று காத்து நடத்த வல்ல மன்னன் வந்து தோன்றக் கெடும் அது போல் அம்மாலை இல்லாது போயிற்று