பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

233


பொன் பொருந்திய படுகதிர் மலையில் ஞாயிறு சென்று அடைந்து மறைய, கதிரவன் இல்லாததால் வருந்தும் உலகை நோக்கி அவ் உலகம் கொண்டாடுமாறு வெண்மதி தோன்ற, சிவந்த வானத்தைப் பெற்ற மாலைக் காலத்தில், முக்கோலைக் கையில் கொண்ட அந்தணர் முது மொழியை நினைப்ப வரைப் போல் கூட்டமாக நாரைகள் ஆரவாரத்தைக் கைவிட்டு மணல் மேட்டில் தங்குமாறு விளங்கும் நீர்த் துறையை உடைய தலைவனே!

அழகு பொருந்திய சிறகை உடைய குருகுப் பறவைகள் இரவில் ஒருகால் ஒலிக்குமிடத்து அதனை நின் திண்மை யான தேரினது மணியோசை என இவள் எண்ணுவாள். எண்ணித் துணிந்த அப்போதே அப் பறவைகள் உள்ளே அடங்கிய ஒலியை உடையனவாய் ஆரவாரம் செய்யும். அதனை மனத்தால் தேரின் மணிஒலி அன்று என்று உணர்ந்து பின்பு அந்த ஒலியைச் சோலையில் உள்ள பறவைகளின் ஒலி என்று தெளிந்து தனிமை கொண்டு வருந்துவாள்.

நீரினின்று உயர்ந்து எழுந்த நெருங்கிய மலர் மணம் கமழுமிடத்து அதை நின் மார்பில் உள்ள மாலையினது மணம் என்று இவள் துணிவாள். அங்ங்னம் முடிவு செய்த அப்போதே அம் மலர்கள் மலரும் நிலையில் அவற்றைக் காற்று அசைத்துத் தன் மீது அது வந்து படும். பட, அது கழியில் பூத்த மலரினது நறுமணம் என்று உணர்ந்து பின்னர் மயக்கம் கொண்டு இவள் வருந்துவாள்.

உயர்ந்த இல்லத்தில் மனத்தை நிறுத்த மாட்டாதவளாய் உன்னை நினைத்துத் தளர்ச்சியால் சிறிது உறங்கியவிடத்துத் தன் தோள் மீது நீ கிடப்பதாய் எண்ணுவாள். எண்ணிய அப்போதே நின் உடல் என்று எண்ணித் தழுவுமிடத்து, நின் வடிவைக் காணாமல் தான்் கண்டது கனவு’ என்று அறிந்து செயலற்றுக் கலங்குவாள்.

பலவற்றையும் நினைத்து வருந்தும் நோயையுடைய மனத் தால் சுழலும் காம நோயில் ஆழ்வாள். இத்தகைய என் தோழி யுடைய திங்கள் போன்ற ஒளியுடைய முகம் விளங்குமாறு புதிய நலம் உண்டாதலைச் செய்ய நின் தேர் குதிரையைப் பூணுவ தாகுக, என்று தோழி தலைவனிடம் வரைவு கடாயினாள்.