பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

“அன்றாட வாழ்வில் அழகு" தமிழ் என்ற தனித் தமிழ்ச் சொல் தொகுப்பு நூலில் இடம் பெற்ற ஆங்கில, வட மொழி நேர்ச் சொற்கள் பலவற்றை இந்நூலில் படித்து மகிழ்ந்தேன். வடமொழிக் கலப்பும், மணிப்பிரவாள நடைமுறையும், ஆங்கிலச் சொற்களும், பிறமொழிச் சொற்களும் இளமைகுன்றா நம் தமிழ் மொழியில் கலந்து எவ்வளவு இன்னல் விளைவித்துள்ளன என்பதை இந்நூலில் அமைந்துள்ள பிற மொழிச்சொற்களும் அதற்கு நிகரான தனித் தமிழ் சொற்களும் நமக்கு எடுத்து விளக்குகின்றன. கலை மாமணி மணவை முஸ்தபா தமிழ் அறிஞர் மட்டுமல்ல, தமிழ் உணர்வும் கொண்ட மிக சிறந்த தமிழர். அவரது வடமொழிப் புலமை நம் தமிழ் மொழியை வளர்க்கப் பயன்பட்டுள்ளதை இந்நூல் வாயிலாக அறிகிறோம். வேற்று மொழிப்பற்றுள்ள சிலர் தமிழ் மொழி அறிவு பெறுவது தமிழை வளர்க்க அல்ல; அவரவர்கள் பற்றுக் கொண்ட மொழி அளவிற்குத் தமிழ்மொழி வளர்ந்துள்ளதா என்பதை ஒப்பிட்டு, நம் மொழி யின் தனித் தன்மைக்கும், தரணி போற்றும் தனிப்பெரும் உயர்விற்கும் ஏதேனும் ஒரு வகையில் குறை காண்பதற்கேயன்றி வேறல்ல. நம்முடைய கவனக் குறைவால், தூய தமிழை போற்றத் தவறிய நிலையால், தொடுமணற்கேணி ஊற்று போல் எதற்கும் அழகு தமிழ்ச் சொல் உள என்பதை உணராமையால் எத்தனை பிற மொழிச் சொற்கள் புற்று நோய் போல் நம் தமிழைப் பற்றிக் கொண்டுள்ள என்பதை, இந்நூல் தெள்ளத் தெளிய எடுத்து விளக்குகின்றது. வழிவழியாக மரபு