பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழித் தனித்தமிழ்ப் புலவர்கள் தோன்றி நம் தமிழின் தொன்மையைப் பாதுகாத்துள்ளனர். அவர்கள் முயற்சிகள் தோல்வியுறும் நேரத்தில்தான், தமிழகத்தில் தமிழர் விழிப்புணர்ச்சி இயக்கமாக, திராவிட இயக்கமாக உருவெடுத்து மறுமலர்ச்சியை ஊட்டியது.

பிறமொழி ஆதிக்கம் எந்த அளவிற்கு நம் தமிழின் தூய்மையைக் குலைத்துள்ளது என்பதை இந்நூலை நுணுகிப் படிப்போருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிய விளங்கும். படையெடுப்பால் தமிழர் பண்பாட்டைக் குலைத்ததை விட, மதத்தால், மடமை எண்ணங்களை பக்தியெனும் போர்வையில் புகுத்தியதால், வடபுலத்தார் தங்கள் மொழிக்குத் தெய்வ முலாம் பூசி, மூவரும் தேவரும் போற்றிப் புகழ்ந்த தமிழ் மொழிக்கு இழிவு கற்பித்ததால் ஏற்பட்ட தமிழ் மொழிச்சிதைவு ஏராளம் என்பதை காலத்தால் அழிவுபட்ட அழகு தமிழ்ச் சொற்கள் பறைசாற்றுகின்றன. நம்மில் பலருக்குத் தெரிந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ள தூய தமிழ்ச் சொற்கள் திரு. மணவை முஸ்தபாவின் முயற்சியால் இந்நூலில் முத்துக் கோர்வை போல் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. “பொறுத்தது போதும் புறப்படு தமிழா” என்ற தமிழ்ச் சொற்கள் குறைந்து 'சகித்தது போதும் சமர் செய் மகனே' என்றல்லவா மாறியுள்ளது. வணக்கத்திற்கு வந்தனமும், வணங்குதலுக்கு நமஸ்காரமும், நட்பிற்குச் சிநேகமும், முழுமைக்கு சம்பூர்ணமும், குடியிருப்பிற்குக் காலனியும், நாட்காட்டிக்கு காலண்டரும், திடலுக்கு கிரெளண்டும், காலை மாலை வணக்கத்திற்கு சந்தியா வந்தனமும், இப்படி எத்தனையோ வடமொழி, ஆங்கிலச் சொற்கள் நம் அழகு தமிழில் புகுந்து குலைத்திருப்பதை இத்தூய தமிழ் உணர்வு கொண்ட நூல் தமிழர்களை தட்டி எழுப்புகிறது. இந்நூலை