பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்த்துரை

அறிவியல் செய்திகளைத் தமிழில் தரவேண்டுவது இன்றியமையாத் தேவையாய் அமைந்து விட்டது. அந்த நோக்கில் பல்வேறு அறிஞர்கள் தமது பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார்கள். அவர்களுள் கலைமாமணி மணவை முஸ்தபா அவர்களும் தமது முனைப்பான முயற்சியில் தொய்வுறாது பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் வளர்ச்சிக்குத் தக்காங்கு கடனாற்ற வேண்டும் என்னும் நோக்கில் தென் மொழிகள் புத்தக நிறுவனத்தின் தமிழ் நூற்பதிப்புப் பணியைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு நூல்களைப் பதிப்பித்த பெருமை இவருக்குண்டு. அறிவியல் கலைச் சொற் களஞ்சியத்தை வெளியிட்டு மகிழ்ந்த இவர், தமிழ் மக்கள் தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிற மொழிச் சொற்களைத் தொகுத்து, அவற்றிற்குரிய தமிழ்ச் சொற்களை வழங்கியுள்ளார்.

காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்றவாறு தனது தமிழ்ப் பணியை வரையறுத்து அமைத்துக் கொண்ட பெருந்தகை மணவை முஸ்தபா அவர்கள், 'அன்றாட வாழ்வில் அழகு தமிழ்’ என்னும் அழகிய நூலை அச்சாக்கி இருப்பது கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். அவரது தமிழ்ப் பணிக்கு எனது பாராட்டு.