பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும். தமிழோடு ஒன்றி இணைந்துவிட்ட பல அயற்சொற்களுக்கும், வழக்கொழிந்த சில சொற்களுக்கும் நிகரான தமிழ்ச்சொற்களைத் தந்துள்ளார்.

பல சொற்களுக்கு அழகிய தமிழ்ச் சொற்க ளப் பொருள் விளக்கமாய் தந்திருப்பது போற்றத்தக்கதாகும். சான்றாக அடல்ட் கட்டிளமை, அனுபவம் - பட்டறிவு, ஆபத்து - ஏதம், இங்க்பேடு மைப்பட்டை, பைலட் - வலவன், காபி - குளம்பி போன்றவற்றைச் குறிப்பிடலாம்.

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அறிஞர் பெருந்தகை மணவை முஸ்தபா ஆற்றி வரும் பணிகள் போற்றுதலுக்கும் பாராட்டுக்குமுரியதாகும். காலச்சுவடுகளாகப் பதிந்து வரும் இவரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி மகிழ்கிறேன்.

“மணவை முஸ்தபா ஒரு மறுமலர்ச்சித் தமிழறிஞர். தமிழ்த் தொண்டே தலையாய பணியாகக் கொண்டவர்; பன்மொழிப் புலமையர், கலைச் சொல்லாக்கச் சிந்தனையாளர்; அறிவியல் பேரார்வலர்; அருமையான மொழி பெயர்ப்பாளர்; கருமமே கண்ணாயினார்; எளிமையே உருவான, இனிமையே வடிவான தமிழ்க் கருமயோகி; செயற்படு சிந்தையர்; சுற்றிச் சுழலும் தமிழ்த் தும்பி; தொண்டே துடிப்பாகக் கொண்ட தூயர். உழைப்பே உயிராக உடையவர்.” என்னும் தமிழிலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தின் வாழ்த்துக்களை வழிமொழிந்து அவரது அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

மு. ஆனந்தகிருஷ்ணன்
துணைவேந்தர்
அண்ணா பல்கலைக்கழகம்