பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் ரூதின் செமியோன் (இவர் தன் பெயரை 'செம்பியன் என மாற்றிக் கொண்டவர்) அவர்கள் என்னோடு உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரும் மனக்குறையை மிகுந்த வருத்தத்துடன் என்னிடம் வெளிப்படுத்தினார்.

“எங்கள் நாட்டில் இருந்தபடியே தமிழ் கற்று, அத்தமிழறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ள எல்லா வகையிலும் முயன்று வருகிறோம். தமிழில் சொல்லாற்றல் பெறும் பொருட்டு இலக்கியத் தமிழை, எழுத்துத்தமிழை நூல் வழி கற்கும் என் போன்ற வெளிநாட்டவர்கள் பேச்சுத் தமிழையும் முனைப்புடன் கற்க விரும்பி தமிழகம் வருகிறோம். இங்குள்ள பல்வேறு தரப்பினர்களை நேரில் சந்தித்து உரையாடி பேச்சுத் தமிழ் சொல்வளம் பெற முயல்கிறோம். நாங்கள் சந்திப்பவர்களிடம் பிறமொழிச் சொல் கலவா இலக்கியத் தமிழில் பேசினாலும் என்னோடு உரையாடும் தமிழ் நண்பர்களில் பெரும்பாலோர் ஆங்கிலம், வடமொழிகலந்த கலப்புத்தமிழிலேயே உரையாடுகின்றனர். இதனால் எங்களுக்குப் பேச்சுத் தமிழான பழகு தமிழ்ச் சொற்களைக் கேட்டுப் பேசிப் பழக அதிக வாய்ப்பில்லாது போகிறது. இது ஒரு வகையில், நாங்கள் எங்களவில் உருவாக்கி வளர்த்து வரும் தமிழார்வத்துக்கே ஒரு தடையாக அமைந்துவிடுமோ என்ற அச்சமே கூட எங்களுக்கு ஏற்படுகிறது. அது மட்டுமல்ல, தமிழ்க்கதைகளைப் படிக்கும்போது அதில் வரும் கதை மாந்தர்களிடையே நிகழும்