உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 O லா. ச. ராமாமிருதம்


என்று எனக்குக் கை ஜாடையாகவே வயிற்றுக்கு வழிகாட்டியவன் எவனாயினும் அவன் வயதுக்கு என் வயது ஏற்ப என் அண்ணனோ தம்பியோ; தாகத்துக்குத் தவிக்கையில் ஏந்திய கையில் கிண்டி மூக்கு வழியோ குடத்து வாய்வழியோ ஜலம் வார்த்தவள் என் தங்கையோ, தாயோ.

போன புதிதில் நாட்கள் இப்படிக் கழிந்த ஒரு வாரத்துள் ஒரு நாள் வயிற்றில் ஈரத்துணி. கண்ணில் உசிரை வைத்துக் கொண்டு சத்திரத்துத் திண்ணையில் அண்ணாந்து படுத்து, கூரை விட்டத்தில், என் கண்ணுக்குத் தெரியாமல், கண்ணில் நிற்கும் உசிருக்கு மட்டும் தெரியும். என் விதியேட்டைப் படித்துக் கொண்டிருக்கையில், மெனக்கெட்டு காரை நிறுத்தியிறங்கி என்னிடம் வந்து:

“யாரப்பா நீ? முகத்தில் காவேரித் தண்ணீர் தெளிந்து நிக்கறதே!” என்று தானே பேச்சுத் தொடுத்து, விவரம் வாங்கிக் கொண்டு, “சரி சரி- இதோ என் பிஸினெஸ் விலாசம்; நாளைக்காலை பத்து மணிக்கு வந்து சேர்”–என்று உத்யோகம் தந்தவன் கடவுள்.

முதலாளி சொற்படி வரவு செலவுக்கு இரண்டு கணக்கு, எழுதினாலும் என் கணக்கு இரண்டுமே அவருக்குப் பிடித்திருந்தது.

சுருட்டினது போக, சுரண்டினது போக, எஞ்சியது அசலுக்கு லாபம் என்கிற கணக்கில் லாபம் பெருகி, நாளடைவில் லாபம், முதலை விழுங்கிய பின், லாபத்திற்கு லாபம் திகட்டல் தட்டின பிறகு, நஷ்டமென்பது லாபத்தில் நஷ்டம்தான்.

ஆனால் அந்த மனுஷன் தொட்டதெல்லாம் பொன். செல்வமும் இருக்குமிடத்தில்தான் சேர்ந்து கொண்டிருக்கும் என்பது அனுபவருசு. அவருக்கு குறைவில்லை.. அதனால் எனக்குக் குறையில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/10&oldid=1125586" இலிருந்து மீள்விக்கப்பட்டது