பக்கம்:அபிதா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 95


இல்லை. பேச்சுக்கும் குறைச்சலில்லை. கை நிறைந்து வந்து, விரலிடுக்கில் கொண்டு வந்ததை வழிந்து ஓடவிட்ட பின், உள்ளங்கையை நக்கிக் கொண்டு, கொண்டு வந்ததையெல்லாம் கண்டு கொண்டேன் என்று நீங்கள் அடிக்கும் தம்பட்டத்தில் யாரை ஏமாற்றுவதாய் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பாவம்? உன் வயதுக் கணக்கில் என்னை அளவெடுத்தால் உன்னைப்போல் எத்தனை பேரை விழுங்கியிருப்பேன் தெரியுமா? எங்களுக்கு அறியக் கூடத் தெரியாது. அறிஞ்சு என்ன ஆகணும் அறிய அறிய துன்பம் எது குறையுது? அதிகம்தான் ஆகுது. காத்திருப்பதும்- எதற்காக என்று கூட எங்களுக்குக் கவலையில்லை- காத்திருப்பதும் காவல் கிடப்பதும்தான் எங்கள் ரகஸ்யம். நீ வேணுமானால், முடியுமானால், தேடி எடுத்துக்கொள்.

நாங்கள் கரையாகவும் படுகையாகவும், கல்வடித்த கண்ணீரே இந்தக் குளமான காரணம் கண்டுபிடி. இதெல்லாம் லேசா? எங்கள் ரகஸ்யம் புரிந்து கொள்ள, முன்னால் உன் சிக்கிலிருந்து விடுபடு. இடம், பொருள், ஏவல், காலத்தின் ஒன்றையொன்று இழுப்பில் நீ மாட்டிக் கொண்டிருக்கிறாய்- .

ப்ரசங்கம்- சீ!-

கூழாங்கல்லை வீசி எறிகிறேன்.

கிளுக்-

ஜலத்தில் விழுந்துகொண்டே அது சிரிக்கிறது. அத்துடன் சேர்ந்து கன்னிக்குளமும் சிரிக்கிறது. என் நிலை கண்டு எல்லாவற்றிற்கும் கேலி. இந்தச் சமயத்தில் ஒன்று தெரிகிறது. உலகத்தில் உயிர் இல்லாத பொருளே இல்லை. அது அது தன் தன் பழிவாங்க சமயத்திற்குக் காத்திருக்கும் பொருள்தான். யாவும் பழி வாங்கும் பரம்பரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/101&oldid=1127700" இலிருந்து மீள்விக்கப்பட்டது