பக்கம்:அபிதா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 0 லா. ச. ராமாமிருதம்



சீற்றம் என்னைப் பற்றிக் கொண்டது. எறிந்த கல்லைத் தொடர்ந்து நானும் குளத்தில் குதித்தேன்.

one.

Two.

Three.

தண்ணீர் மும்முறை என்மேல் கலைந்து மூடுகிறது. மூழ்குகிறேன். மூழ்கிக்கொண்டேயிருக்கிறேன். இன்னும் அடி தட்டவில்லை. ஏது, இந்த வெய்யிலில் இவ்வளவு ஆழமா? அம்மா என்ன குளு குளு, எத்தனை வருடங்கள் இதுபோல் ஆற அமிழ குளித்து! இங்கு விட்டுப்போனபின், மறுபடியும் இப்பத்தான் வருடங்களின் சுமை, சோர்வுகளை ஜலம் கழுவி விடுகையில் அம்மாடி! என்ன இதமடி! மீறி என்னை அம்மா சொல்லி அம்மாவையே நினைக்க வைக்கிறது. அம்மா என் கையில் ஜலமே உன்னைத்தான் துதிக்கிறேன். என் தாய்கூட தன் கடைசி வேளையில் உன்னில்தான் புகுந்தாள். நானும் உன்னிடமே வந்துவிட்டேன். அம்மா போதுமடா ஜன்மம், “ம்மா உன் ஜல ரூபத்தில் உனக்கு முகமில்லை, தலையில்லை, கையில்லை, காலில்லை. எல்லாம் வயிறு: கரையில்லா வயிறு. அதனால் தான் ‘மா'விலும் பெரிசு அம்மா. மீண்ட கர்ப்பம் மீண்ட சொர்க்கம் இருளோடு இருளாய் நான் எனத் தனிப்படுவதன் வேதனையிலாவது வேறெங்கு இவ்வாறு முழுமையில் இயங்க இயலும்?

-ஆனால் இத்தனையும் மூச்சின் 'தம்' இருக்கும் வரை குளுமையில் ஆழ்ந்து கொண்டே போகையில் காணும் ஆசைக் கனவுதான். பிராணனின் விம்மலில் மார் வெடிக்கையில், தொண்டை தூணாய்ப் புடைக்கையில், இத்தனை வருடங்கள் கைகள், புஜங்கள், கால்கள், தொடைகளில் உறங்கிக் கிடந்த நீச்சல் திரும்ப விழித்துக் கொள்கை யில், மூச்சு மூச்மூச் மூச்மூச்மூஊஊ- உணர்வு காலத்தின் ஆழத்தின் அடியையே தொட்டுவிட்டு, உடல் உதைத்துக் கொண்டு பந்துபோல் மேல் எழுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/102&oldid=1130541" இலிருந்து மீள்விக்கப்பட்டது