பக்கம்:அபிதா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 97



தலையை உதறி, விழிகளை அடைத்த ஜலத்தை உதறி சுற்று முற்றும் பார்க்கிறேன். இது ஒரு புது விழிப்பு.

கரையில் கைகளைப் பிசைந்துகொண்டு அபிதா நிற்கிறாள். நான் திகைத்துப் போனேன்.

“அபிதா நீ இங்கு எங்கு வந்தாய்? என் பின்னாலேயே வந்தையா?”

அவள் பேசவில்லை. வாயடைத்துப்போய் உதடுகள் தவித்தன. அவள் விழிகள் என்னை விழுங்கின.

“நான் முழுகிப் போயிட்டேன்னு பாத்தையா?”

அவள் முகத்தின் திகில் கலைந்தது.

“அட அசடே, பயந்துட்டையா? நீயும் வாயேன்! உனக்கு நீச்சல் தெரியுமா? தெரியாட்டா நான் பார்த்துக்கறேன் கவலைப் படாதே. இங்கே இந்த வேளைக்கு யாரும் வரமாட்டார்கள். நீயும் நானும்தான். தைரியமா இறங்கு-’’

இடுப்பு முடிச்சில் கையுடன் தயங்கினாள்.

“புடவை நனைஞ்சு போமேன்னு பயமா? கரையிலேயே சுருட்டிவையேன்! வெட்கமா? நான் வேணுமானால் இதோ முழுகிடறேன். நீ கழுத்துவரை இறங்கினப்புறம் இருவரும் ஒண்ணுதான், சரிதானே! இதோ one, two, three!”

முங்கி எழுந்து கண் திறந்ததும், வாசலில் கயிற்றுக் கட்டிலில் நான் கிடக்கக் கண்டேன். வானில் கூடை கூடையாக வாரிக் கொட்டியிரைந்து கிடந்த நக்ஷத்ரங்கள் கண் சிமிட்டி என்னை ஏளனம் செய்து கொண்டிருந்தன.

வாசற் கதவு இறுக அடைத்திருந்தது.

உள்ளே சாவித்ரிக்கும் அவள் சித்திக்கும் நடுவே படுத்த வண்ணம் அவள் பத்ரமாயிருப்பாள்.

அ- 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/103&oldid=1130546" இலிருந்து மீள்விக்கப்பட்டது