பக்கம்:அபிதா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102 O லா. ச. ராமாமிருதம்


பூமியைப் பிளந்து கொண்டு புறப்படும் முளையைச் சொல்வேனா?

கோத்து வாங்க மறந்து, உள்ளுக்கிழுத்த மூச்சு உள்ளுக்கே இன்னும் இன்னும் இன்னும் - ஐயையோ!-இன்னும் இழுத்துக் கொண்டே போகும் இரக்கமற்ற தன்மையில், இந்த அபிஷேக தீர்த்தம், ஒரே சூட்டுச்சரடு, சதையுள் இறங்கி, அங்கங்கே ஏதேதோ மந்திரங்கள் புரிகின்றது. நாளடைவில், என் மூதாதையர் நாளிலிருந்தே, பரம்பரையாய் ஒய்ந்துபோன யந்திரங்கள், ஏதேதோ சக்கரங்கள், தம்தம் முதல் சுற்றில், ரத்தத்தில் அசைய ஆரம்பிக்கின்றன.

- இதென்ன, ப்ரக்ஞையுடன் புதுப் பிறவியின் பயங்கரம், ஆச்சரியம், தோலுரிப்பு, அழல் நடுவில் ஸ்புடம், தபோக்னியின் கானல் நடுக்கம், கண்ணிருட்டு, விடியிருள் பிறந்த மனதோடு பிறந்த மேனியின் விடுதலை, காலமாய் உடலின் சருமத்வாரங்களை, நெஞ்சின் சல்லடைக் கண்களை அடைத்துக் கொண்டிருந்த அழுக்குகளின் எரிப்பில், பழைய வேகத்தை மீண்டும் பெற்ற புத்துணர்வில், ஜீவநதியின் மறு ஒட்டம். ஆதாரஸ்ருதியின் தைரியமான, கம்பீரமான மீட்டலின் சுடர் தெறிக்கும் சொடசொடப்பு, காண்டீபத்தின் டங்காரத்தில் உடல் பூரா, உணர்வு பூரா, மனம் பூரா ஜல் ஜல் ஜல் சிலம்பொலி!

கண்ணைக் கசக்கி இமை சிமிழ் திறந்ததும்
கண் கரிப்புடன் திரையும் கழன்று விழுந்து
சித்திரத்துக்குக் கண் திறந்த
விழிப்பு.

என்னைச் சூழ்ந்து கக்கும் வென்னீரின் ஆவியினின்று என் புதுத் துல்லியத்தில் புறப்படுகிறேன்.

உலையிலிருந்து விக்ரகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/108&oldid=1130556" இலிருந்து மீள்விக்கப்பட்டது