உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108 O லா. ச. ராமாமிருதம்


ஆனால் ஒன்று. குற்றாலமும், கொடைக்கானலும், கோவளமும் இருக்க, சில பேருக்குச் செவிமடலில் கூடத் தொங்கும் குந்துமணிச் சதைதான் கண்ணுக்குச் சட்டென்று படுவதுபோல், கரடிமலைதான் உனக்கும் படணுமா? இதிலேயே விதியை நீ காணவில்லையா? இடையில் வந்த மனைவி நீ. என் விதியை நோக்கிச் செல்ல என்னை விடு சாவித்ரி, இதை நான் சொல்லாமலே புரிந்துகொள்ள உனக்குச் சக்தியுண்டு என்பதை நானறிவேன். எப்படியும் நீ என்னிலும் உயர்ந்த சரக்கு.

நான் நன்றியற்றவன். ஒப்புக்கொள்கிறேன். இப்போ நான் எதை வேணுமானாலும் ஒப்புக்கொள்வேன். ஆனால் என் நன்றியால் உனக்கு இனி என்ன பயன்? சரி, என் நன்றியைவிட என் நாணயம்தான் இப்போது எனக்குப் பெரிதாயிருக்கிறது, போயேன். இது நாணயமல்ல, சுயநலம் என்பாய். சரி, அப்படித்தான், போயேன். எதை வேணுமானாலும் இப்போ நான் ஒப்புக்கொள்வேன். சுயநலத்தைக் காட்டிலும் பெரிய உண்மை எது? எனக்குக் காட்டு. உயிர் உண்டான நாளிலிருந்து எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில். சுயத்தைத் தாண்டிக் கேள்வியுமில்லை, பதிலுமில்லை, உண்மையுமில்லை. இதை நான் சொல்வதே ஒரு சமாதானம்தான்.

வாழ்வு ஒரு கனவானால், அதை அறிய உணர்வற்று, இதுவரை விரலுக்கிடுக்கில் நனவாய் வழிந்தது போக மிச்சத்தின் கனவை ருசிக்க, கனவாய் நிறுத்த இயலாதா? கனவு, நிலையாமை, நித்யம், அநித்யம்- இதெல்லாம் நாம் இருக்கும்வரை பேசும் பேச்சுத்தானே! எல்லாமே இருக்கும்வரைதானே!

- இதென்ன சட்டென்று கன்னத்தில் மட்டும் ஈரக்காற்று? சாவித்ரி நீ துப்பினையா? “தூ, அவள் உனக்குப் பெண்ணாயிருக்க வயஸாச்சு. இதென்ன அக்ரமம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/114&oldid=1130642" இலிருந்து மீள்விக்கப்பட்டது