பக்கம்:அபிதா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 0 லா. ச. ராமாமிருதம்


மலைமேல் இடி குமுறுகிறது.

இதுதான் உன் பதிலா?

9

அபிதா எப்பவோ தயாராயாச்சு.

அத்தனை இட்டிலியையும் அவளே வார்த்து, பற்றுப் பாத்திரங்களை அவளே தேய்த்துக் கவிழ்த்துமாகிவிட்டது. இத்தனைக்கும் இன்னிக்கு ஏனோ தினத்தைவிட அதிகப்படி வேலை. அவள் சித்தியின் சூழ்ச்சியாவே இருக்கலாம். ஆனால் காரியங்கள் மளமளவென முடிந்தன. உடை மாற்றிக் கொள்வதுதான் பாக்கி. இன்று அபிதாவின் உடம்பில் பாதரஸம் ஓடிற்று! சினிமா என்றால் இந்தத் தலைமுறைக்கு என்ன பைத்யமோ? ஆனால் அபிதா பாவம்! அவள் ஆவலைப் பார்த்தால் வீட்டுச் சிறையை விட்டு எங்கேயும் போயிருப்பாள் என்று தோன்றவில்லை. சித்திதான் அவள் இடத்தையும் சேர்த்து அடைத்துக் கொண்டிருக்கிறாளே? இப்போக்கூடக் கடைசி நிமிடத்தில் சித்தி தடுத்து விடுவாளோ என்று பயம்கூட இருக்கும்.

சாவித்ரி பூத்தொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஈதென்ன நேற்றிலிருந்து ஓயாத தொடுப்பு! இவ்வளவு தொடுப்பலுக்குப் பூ ஏது? அவள் பூத்தொடுப்பைக் கண்டால் ஏதோ அச்சம் கொள்கிறது. எல்லாம் அறிந்து தன்னுள் தானடங்கி மேலிறங்கிய மோனத்தில் விதியின் தொடுப்பல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/116&oldid=1130646" இலிருந்து மீள்விக்கப்பட்டது