பக்கம்:அபிதா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 111


குற்றமுள்ள நெஞ்சு நுட்பம் ஒண்ணுமில்லாததில்கூட ஏதேதோ படிக்கிறது.

குருக்கள்தான் வீட்டுக்குக் காவல். அவர்தான் உண்மையில் மஹான். கட்டின பசுப்போல் தோன்றுகிறார். ஆனால் எதுவும் அவரிடம் ஒட்டவில்லை. வீட்டைப் பார்த்துக் கொள்வது பற்றி மாமி ஏதேதோ உஷார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறாள்; இதுபோல் பழைய சமயங்களில் அவர் பார்த்துக்கொண்ட லக்ஷணம் பற்றி ஏசிக்கொண்டிருக்கிறாள். ஆனால் வார்த்தைகள் இந்தக் காதுள் நுழைந்து அந்தக் காதில் வெளி வந்துகொண்டிருக்கின்றன.

அபிதா கூடத்து அறையிலிருந்து வெளியே புறப்பட்டாள். சாவித்ரி தன் புடவையை உதவியிருக்கிறாள். அவள் உடல் விளிம்பெல்லாம் அவள் உள் ஒளி தகதகக்கின்றது. புடவையில் அங்கங்கே தெறித்த ஜரிகைப் பொட்டுகள், பூக்கள் தனித்தனியே உயிர் மூச்சு விடுகின்றன.

வண்டு மல்லாந்தாற் போல் என் விழிகள் அகன்று விட்டன. அதனாலேயே மற்றவர் காண்பதைவிட நான் கூடக் காண்கிறேன்.

சாவித்ரி எழுந்து தான் தொடுத்த சரம் அத்தனையும் பந்து சுருட்டி அபிதாவின் தலையில் சொருகினாள்.

சித்தி ஒரு வழியாகக் குருக்களுக்குச் சொல்லித் தீர்த்துவிட்டு வந்தாள். அபிதாவைக் கண்டதும் அவள் முகம் புழுங்கிற்று.

“ஏண்டியம்மா, எல்லாப்பூவையும் உன் கொண்டையிலேயே வெச்சுத் திணிச்சுக்கணுமா? வாங்கின கையும் தொடுத்த கையும் தலைக்கு விரலை நறுக்கி வெச்சுக்கறதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/117&oldid=1128035" இலிருந்து மீள்விக்கப்பட்டது