116 O லா. ச. ராமாமிருதம்
என்னுள் புகுந்து கொண்ட அழும்பு சாவித்ரிக்குத் தெரிந்துவிட்டது. மேலும் வற்புறுத்த வேண்டாம் என்று அவள் தடுத்துவிட்டாள்.
வண்டி தட்டுத் தடுமாறித் தள்ளாடி கண்ணுக்கு மறைந்தபின் எந்நேரம் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தேனோ தெரியாது. லேசாய் மாரை வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வண்டு இடது புறம் கிளம்பி வலது பக்கமாய், உடலின் உள்சுவரில் முதுகுப் புறத்தைச் சுற்றி வந்து, இதயத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே கட்டியிருக்கும் கூட்டில் தங்கி விண்விண் எனத் தெறித்தது. சில கணங்கள் கழிந்து மீண்டும் மீண்டும் இதே ப்ரதக்ஷணம். மார்பை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டால் மட்டும் வலி விட்டு விடுமா? துருவல் அதிகரித்தது.
Heart attack என்பது இதுதானா?
ஏற்கெனவே இதைப்பற்றி டாக்டரிடம் கேட்டதற்கு:
‘நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதைவிடப் பன்மடங்கு அதிக வலி அந்த வலி. அடேப்பா! வலி ஏறிக்கொண்டே போகும் வேகத்தில், உச்சத்தில் வலிக்கிறது என்று சொல்வதற்குக்கூட உங்களுக்கு நேரமிருக்காது. நினைவு தப்பிவிடும். நினைவு மீண்டால் உங்களுக்கு மாரடைப்பு வந்ததைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லி பெருமை பட்டுக்கொண்டிருக்க முடியும். மீளாவிட்டால்-well, அதைப்பற்றி, எதைப்பற்றியுமே உங்களுக்கப்புறம் என்ன?’ என்று சிரித்துக்கொண்டே அவர் தைரியம் சொல்லியிருக்கிறார்.
இது சகுந்தலையின் கோபம்.
பிறகு அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஆமாம், இந்தக் கந்தல் பாய்க்கும், ஒட்டைச் சொம்புக்கும் காவல்