உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 O லா. ச. ராமாமிருதம்

குலைவோ, அல்ல என் வறுமை நினைவுகளிலிருந்து முற்றிலும் எனக்கு விடுதலையில்லையோ, அல்ல என் சிப்பந்திகளின் மறைமுகமான ஏளனமோ- இவையெல்லாமே சேர்ந்தோ- நிச்சயமாகத் தெரியாது. ஆனால் ஒன்று புரிந்தது. நாளடைவில், எங்கோ நினைப்பின் அடிவாரத்தில் மனம் கசந்தது.

என் வாழ்க்கை, குறுக்கு சந்தில் நுழைந்து தன் பாட்டைத் தப்பிவிட்டது.

முதலாளி மகளை மணந்தது மூலம், எங்கோ, ஏதோ முறையில், என் நாணயம் பறிபோன உணர்வு.

குளிக்கப் போன இடத்தில், குளத்தில் மூழ்கின சமயத்தில் விரலிலிருந்து மோதிரம் நழுவிவிட்டாற்போல்.

பிடிபடாத தாது இந்தக் கசப்பு, புரியாத கோபம், இனம் தெரியாத ஏக்கம், காரணம் காட்டாது ஏய்க்க ஏய்க்க, அதன் மூட்டம் மட்டும் எங்கள் உறவில் கவிந்தது.

அற்ப விஷயத்தில்தான் ஆரம்பிக்கும். அடியெடுத்துக் கொடுத்தவன் நானாவேயிருப்பேன். ஒரு சொல்லுக்கு எதிர்ச் சொல், ஒன்பது சொல்; படிப்படியாக ஏறும் வார்த்தைத் தடிப்பில், சண்டையின் காரணம் மறந்துபோய் வெற்றிக்கொடி கடைசி வார்த்தை யாருக்கு எனும் வீறாப்புத்தான் மிச்சம்.

ஆனால் சாவித்ரியிடம் ஒரு குணம். அவள் கசப்பற்றவள். அவள் don't care மாஸ்டர். வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, கோபத்திலிருந்து விடுதலை கண்டு, நேர்ந்ததை நிமிஷமாக மறந்து உடனே கலகலப்பாகி விடுவாள். மறதி அவள் வெற்றி. அவள் உயர்ந்த சரக்குத்தான் எனும் இந்த உள்ளுணர்வே என் வேதனை. கடித்த பற்களிடையில் சொல்லத்தகாத வார்த்தைகள் நாக்கு நுனியில் எனக்குத் தவிக்கும்.

இடியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை. சண்டை போலவே சமரஸத்திலும் அவள்தான் முதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/14&oldid=1125597" இலிருந்து மீள்விக்கப்பட்டது