பக்கம்:அபிதா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 0 லா. ச. ராமாமிருதம்


“பிறந்தால்- என்று அர்த்தம்” என்பாள். அதில் என்ன திருப்தியோ?

இரண்டு வழியிலும் விருத்தியிலாத வம்சம்.

ஜன்னல் வழி உள்வழிந்த நிலவொளியில் ஆள் உயரப் படத்தினின்று அவள் தந்தைமுகம் என்னைக் கடுக்கும். எனக்கு உடல், மண்டையெல்லாம் குறுகுறுக்கும். ஆள் போயும், படத்திலிருந்து என்னைக் கண்காணிப்பு.

படத்தை எங்கள் அறையிலிருந்து அப்புறப்படுத்த அவள் அடியோடு மறுத்துவிட்டாள்.

“உங்களை அவர் என்ன செய்தார்? ஏன் தன் பெண், பங்கு, சொத்து எல்லாத்தையும் உங்களுக்கே கொடுத்து விட்டுப்போன குத்தமா?”

“ஏன், முடிந்தால் தன்னோடு எடுத்துக்கொண்டு போகட்டுமே!”

“இந்தமட்டும் கண்டுபிடிச்சுச் சொல்லிட்டேளே! நன்றியென்று ஒன்று நம்மிருவருக்குமே இருக்கட்டும்.”

“நல்லெண்ணங்கள், உணர்வுகள் எல்லாமே உனக்குத் தானே பிறவியிலேயே சாஸனம், எனக்கேது? அப்பாமேல் பக்தியில் கால்வாசி, கொண்டவன்மேல் இருந்தால் தம் வாழ்க்கை எப்பவோ உருப்பட்டிருக்கும்.”

“ஏன் இப்படி விஷமா கக்கறேள்? பக்தியென்று என்னிடம் என்ன எதிர்பார்க்கறேள்? என் தந்தையை நான் மறுத்துவிட்டால் உங்களிடம் பக்தி கூடிவிட்டதா?”

உடனே மறுபடியும் சண்டை.

பேச்சுக்குப்பேச்சு பதிலுக்கு என் வாயை அடைக்கும் கேள்விகள் அவளிடம் எப்பவுமிருந்ததுதான் என் புழுக்கம்.

புயல் கடைந்த கடலில் கட்டுமரம் அலையுச்சியின் நுரை கக்கலின் மேல் சவாரி செய்தால் என்ன? அலையிறங்கி மிதந்தால் என்ன? அலை ஒய்வது என்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/18&oldid=1125637" இலிருந்து மீள்விக்கப்பட்டது