பக்கம்:அபிதா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா 0 13


அடக்கி அடக்கித் திமிறத் தவித்த என் சீற்றத்தின் எதிரொலியாய், தாழ்வாரத்தில் மழைச்சாரல் சாட்டை வீறுகிறது. ஜன்னல் கண்ணாடியில் தாரை வழிந்த, வண்ணம்தான். வெயில் பார்த்து நாள் மூணாயிற்று. அறையில் சுவர்கள் ஒட்டிய மூலைகளில் பகலிலேயே இருள் தேக்கத்தில் அவரவர் மனநிலைக்கேற்ப, உருவங்கள், முகங்கள், பெரும் வாய்கள், முழுவிழிகள், வீக்கங்கள் திரண்டு தம் ரஹஸ்யங்கள், அவஸ்தைகள் ஏதேதோ தம் ஊமையில் வெளியிட முயன்றன. அவைகளின் காலம் கடந்த ஏக்கம் நெஞ்சில் வண்டல் இறங்குகையில் தாளொணா அடிப்பாரம் மார்பை அழுத்துகிறது.

ஜன்னலுக்கு வெளியே, இன்னும் ஒரு பெரும் உடைப்புக்கு முஸ்தீப்பாய் ஒரு மேகத்திரள் குமைகிறது. இந்தப் பக்கமே இடைநிலையென்பதே கிடையாது. மழை. பெய்தால் ப்ரளயம். வெயில் காய்ந்தால் sun stokeதான்.

மெழுகுவர்த்தியுடன் சாவித்ரி அறையுள் வருகிறாள். நேற்றிரவே மின்சாரம் தோற்றுவிட்டது.

என் புருவங்களின் கீழிருந்து அவளை நோக்குகிறேன். அவள் கையில் பிடித்த மெழுகுவர்த்தியின் சுடரில் அவள் முகம் ரோஜாவின் செவ்விதழில் ஏற்றிக் கொண்டிருக்கிறது. எடுப்பான மூக்கின்கீழ், உதடுகள் சிற்பச் செதுக்கலில் அமைதியாக உறங்குகின்றன. நடு வகிடலிருந்து கூந்தல் வங்கி வங்கியாய், நீர்வீழ்ச்சிபோல் இருமருங்கிலும் இறங்குகிறது. அவள் உடுத்திய மஞ்சள் “லேட்டின் சேலை, அங்கத்திரட்சிகள்மேல் பாயும் அலைகளில், இந்த முக்கால் இருள், மிச்சம் கால் ஒளியாட்டத்தில் புலிக் கோடுகள் பிறந்து விளையாடுகின்றன.

ஜன்னல் கட்டைமேல் மெழுகின் உருக்கை இரண்டு சொட்டு சொட்டி அதன்மேல் வத்தியை நட்டுவிட்டு நகர்கிறாள், அவள் நிழல் பெரியதாய்ச் சுவரை ஆள்கிறது. சாவித்ரியின் உடல்வாகும் சற்று வாளிப்புத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/19&oldid=1125641" இலிருந்து மீள்விக்கப்பட்டது