பக்கம்:அபிதா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 O லா. ச. ராமாமிருதம்

என் காலடியில் தரையில் அமர்கிறாள்.

புலி.

கையை எடுக்காது வரைந்த ஒரே கோட்டின் வளைவு தெளிவான ஓட்டம்போல் அவள் உருவம் எனக்கு விட்டுச் சொல்ல இயலா ஏதோ முறையில், மெழுகுவர்த்திச் சுடரொளியில் இந்த அறையின் தோற்றத்துடன்- ஏன், இந்த வேனிலோடேயே இழைந்திருக்கிறது. நாங்களே இந்தச் சமயத்தின் ஓவியத்தின் வண்ணக் குழையில் கலந்து, ஓவியம் உயிருடன் மிளிர்வதாய்த் தோன்றிற்று. அபூர்வமான அமைதி எங்கள்மேல் இறங்கிற்று. அதன் இதவை ஸ்பரித பூர்வமாகவே உணர முடியும்போல் அத்தனை மெத்து. புலியும் ஆடும் பாம்பும் இரையும்; சாவித்ரியும் நானும் இந்தச் சமயத்துக்கு சமாதானம்.

சோகச் சாயை படர்ந்து கவித்வம் நிறைந்து நெஞ்சில் பாயும் இந்த அருவியின் கரையில் எத்தனை நேரம் இப்படியே அமர்ந்திருந்தோமோ!

புயலின் மையம் அமைதி.

ஜன்னல் கண்ணாடிமேல் மழை தாரை வழிந்த வண்ணமிருந்தது.

சகுந்தலையின் கண்ணீர் . "பளிச்" "பளிச்"- மின்னல்போல் வலி கொடி பிரிந்து மார்புள் பாய்ந்தது. மாரைப் பிடித்துக்கொண்டேன். ப்ராணன் போய்விடும் வலி. ப்ராணன் போய் விடாதா?

“என்ன யோசனை?” சாவித்ரியின் குரல் எங்கிருந்தோ வந்தது. “என்ன, என்னவோ போலிருக்கேள்? எதை நினைச்சுண்டிருக்கேள்?”

“கரடிமலை” என்றேன். தொண்டை கம்மிற்று; வார்த்தை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/20&oldid=1125642" இலிருந்து மீள்விக்கப்பட்டது