பக்கம்:அபிதா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 O லா. ச. ராமாமிருதம்


அவள் பார்வை மெதுவாய் என் பக்கம் திரும்பிற்று. அதில் நான் கண்டது அலஷியமா? அதிர்ச்சியா? என்னையே அடையாளம் தப்பிப்போன திடீர்மறதியா? அவள் விழிகளின் ஆழம் எனக்கு என்றுமே பிடிபட்டதில்லை. நான் அறிந்தமட்டில் அவைகளில் என்றுமே காட்டில் விட்ட திகைப்பு. எந்த இருட்டினின்று இந்தப் பிறவியுள் வழி தப்பி மிதந்து வந்துவிட்ட உயிர்க்கீறல்? அவள் விழிச்சிமிழ்கள் மெதுவாய்த் திறந்து நிறைந்து வழிந்து கன்னங்களில் கண்ணீர் அருவி கண்டது. அவள் அதைத் துடைக்க முற்படவில்லை.

எத்தனை நேரம் இப்படியே மெளனமாய் நின்றோமோ! நித்தியத்துவத்தினின்று சிந்தி உருண்ட கண்ணீர்த்துளி விரிந்த இரு பாதிகள் எனக் காட்டும் முறையில் எங்கள் மேல் கவிந்த வான்கிண்ணமும், எங்களை ஏந்திய பூமியின் வரம்பும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் விளிம்பு கட்டின. நாங்கள் அதனுள் மாட்டிக்கொண்ட கண்ணீரின் நிழல்கள்.

குன்றின் உச்சியினின்று தீபாராதனைமணியின் கார்வை எங்கள் மேல் தீர்க்கமாய் இறங்கிற்று.

காலத்தைத் தடுத்து நிறுத்திய இந்தத் தருணத்துக்கு, மணியோசைதான் சாட்சி. குருக்களின் கைத்தட்டல் கடவுளை வட்டம்வரும் கற்பூரச் சுடர் சாக்ஷி. இத்தனை வருடங்கள் தான் இருந்தது தெரியாமல் நினைவில் மூழ்கிக் கிடந்த இந்தவேளை, திரும்பவும் நெஞ்சில் முகடுகண்டதும் பரபரப்புத் தாங்க முடியவில்லை. மார்க்குலையில் ஒரு கை தவித்தது.

“ஏன், நெஞ்சு காஞ்சு போச்சா? இந்தாங்கோ ஒரு முழுங்கு குடியுங்கோ-”

என் தொண்டையின் அடைப்பு சாவித்திரிக்குப் புரியாது. புரியவைக்கவும் நான் முற்படவில்லை. டம்ளரை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/26&oldid=1126418" இலிருந்து மீள்விக்கப்பட்டது