பக்கம்:அபிதா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 0 லா. ச. ராமாமிருதம்

உப்புமண்ணை வெச்சு நெருட வேண்டாம். வயத்துலேயே வெச்சுண்டு வெடிக்காமல் உப்பி உப்பி, செத்தாலும் வேகாத பச்சைப் புண்ணாய் அழுகிண்டு இருக்க வேண்டாம். கட்டையிலே வெச்சதும் காஷ்டம் காஞ்சதா, தணல்பட்டவுடன் பஸ்மமா போச்சுதா? அதுவே என் வெள்ளை மனசுக்கு அத்தாக்ஷியாக இருக்கட்டும்."

பிராசம் எப்படித்தான் பெண்களுக்குக் கூடவே பிறக்கிறதோ!

குன்றை, ரயில் பாதிப்ரதக்ஷிணம் செய்கையில் சுண்ணாம்பும் செங்காவியும் ஒழுகிக் காய்ந்து போன கல்படிக்கட்டு கீழிருந்து கிளம்பிச் சீறி வளைந்து ஏறி உச்சி மேல் அடர்ந்த பச்சையுள் புகுந்து மறைந்தது. குன்றின் அடிவாரத்தில் படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் மொத்தாகாரமாய், முகம் தேய்ந்து கல்லில் ஒரு உரு, சிற்பி செதுக்க ஆரம்பித்துப் பாதியில் விட்டது, நந்தியுமில்லை நாயிலும் சேர்த்தியில்லை. தலைமுறை தலைமுறையாகப் படிக்கட்டைக் காவல் காத்துக் கிடக்கிறது.

மலையுச்சியில் கருவேலங் காட்டுள், மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் திருவேலநாதரை எனக்கு நன்கு தெரியும். கோபுரமா, கூரையா, பந்தலா ஒன்று கிடையாது. பக்தர்கள் எழுப்பப் பார்த்தும் ஒத்து வரவில்லை. ஒன்று கூரை சரிந்தது; இல்லை கொத்தனுக்குக் கால் ஒடிந்தது. இல்லை மெய்வருந்தச் சேர்த்துக் குன்றின் மேல் கொண்டு போய்க் குவித்த மணலும் தாளித்து வைத்த சுண்ணாம்பும் அங்குமட்டும் இரவில் மழை பெய்து மறுநாள் சோடை கூடத் தெரியாது கரைந்து போயின. பிறகு அவரே கனவில் வந்து சொல்லிவிட்டாராம்: “நீங்கள் இந்த சிரமமெல்லாம் படாதீர்கள். இதுவேதான் என் மஹாத்மியம்" என்று. எது மஹாத்மியம்? பக்ஷிகள் எச்சமிட்டு, குரங்கு கொட்டையுமிழ்ந்து, வெய்யிலில் வெந்து, மழையில் ஊறி, மண்டை வழுக்கை உருண்டையாய் வழவழ பளப்பள-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/28&oldid=1126449" இலிருந்து மீள்விக்கப்பட்டது