பக்கம்:அபிதா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 23

அடுத்தவர், மலையேறச் சோம்பல், ஆனால் புண்ணியம் மட்டும் கட்டிக்கொள்ள ஆசைப்பட்டவர், குன்றடியில் படிக்கட்டில் ஏற்றிவைத்த கற்பூரத்தைத் திருவேலநாதர் தன்னிடத்திலிருந்தே மோப்பம்பிடித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் அதைக்கூட அவருக்கு ஏற்றிவைப்பார் யார்?

“ஆனால் அவர் க்ருபை புரிவதும் அந்த மாதிரி சிரத்தாவான்களுக்குத்தான்-" என்பார் நொண்டி குருக்கள். குருக்களுக்குக் கோபமில்லை; கசப்பில்லை. அந்த நிலையெல்லாம் அவர் எப்பவோ தாண்டியாச்சு.

“எங்கள் ஜாதியே விதியை நொந்து பயனில்லை. சுவாமியைத் தொட்டு நடத்தும் ஜீவனம் உருப்பட வழியேயில்லை. இது குலசாபம். திருஷ்டாந்தம் வெளியே தேடவேண்டாம்.எங்கள் குடும்பத்தையே எடுத்துக்கொள்ளேன். அரிசி ரூபாய்க்கு எட்டுபடி வித்த அந்த நாளிலேயே எங்களுக்கு விடிஞ்சதில்லை. என்னைப்பார். கார்த்திகை அமாவாசை வந்தால் எழுபதை எட்டிப் பிடிக்கப்போறேன். அறுபது வருஷமா நொண்டிண்டிருக்கேன். இளம் பிள்ளைவாதம் காலை இழுத்தூட்டு நொண்டி குருக்கள்னு கட்டின பட்டம் வழக்கில் வந்து கெட்டிப்பட்டு, தொட்டிலிட்டு சூட்டின சர்மன் ஊருக்கே மறந்து போச்சு. மூக்குக் கண்ணாடிக்குக் கம்பி ஒடிஞ்சு வருஷம் மூணு ஆறது· கயித்தைப் போட்டுக் கட்டிண்டிருக்கேன். மூக்குக்குப் பழக்கம் கண்ணுக்குத் தைரியம்னு தவிர கண்ணாடியால் உண்மையில் உபயோகமில்லை. அதில் பவர் எப்பவோ போயாச்சு.

“சரி அதுதான் அப்படிப் போச்சா? போகட்டும், இந்த நொண்டிக்காலோடு எங்கள் சக்திக்கேற்றபடி- இல்லை, சக்தியை மீறிக் கலியாணம்- எங்கள் ஜாதியிலே பெண்ணுக்குக் கிராக்கி- கலியாணம் ஆகி சிசுக்களுக்கும் குறைச்சலில்லை. குழந்தைகள்னு சொல்றோம், ஆனால் எல்லாம் பெத்த கடன்கள்; வெறும் இச்சாவிருத்திகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/29&oldid=1126458" இலிருந்து மீள்விக்கப்பட்டது