உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 0லா.ச.ராமாமிருதம்


குழியில் வெக்கறதும் வயத்தில் காண்றதுமா உயிர்க் குமிழிகள் வெடிச்சது போக தங்கினது பிள்ளை ஒண்ணு, பெண் ஒண்ணு. சகுந்தலையைத்தான் உனக்குத் தெரியும். அவளுக்கு அண்ணன், அம்மா செல்லம், உதவாக்கரை. ஒரு நாள், 'எனக்கு உடம்பு சரியில்லை கோயிலுக்குப் போ'ன்னு சொல்லியிருக்கேன். வேறெங்கோ காசு வெச்சு கோலியாடப் போய், ஒரு கால பூஜை, அதையும் முழுங்கிட்டான். விஷயம் வெளிப்பட்டதும் அடிச்சேன்; அதுவே சாக்கு வீட்டை விட்டுப் பன்னிரண்டு வயசில் ஒடிப் போனவன் இன்னும் திரும்பிவல்லே. வந்தால் உன் வயசிருப்பான். நான் செத்துப் போனப்பறம் பட்டனத்தார் மாதிரி கொள்ளி போடத்தான் வருவானோ இல்லை அவனேதான் கொள்ளிக்கிரையாயிட்டானோ? ஏன் முகத்தை சுளிக்கறே? பேச்சுன்னா எல்லாத்தையும் தான் பேசி ஆக வேண்டியிருக்கு. மாமிக்கும் எனக்கும் பேச்சறுந்து போச்சு. நீயே கவனிச்சிருக்கலாம். இதே தான் காரணம். என்ன பண்ணுவேன்? திருவேலநாதர் பிறக்கும் போதே பிள்ளையாண்டானுக்கு மண்டையில் மரத்தையும் காலில் கருவேல முள்ளையும் தைச்சு விட்டுட்டார். அவரால் எங்களுக்கு முடிஞ்சுது அவ்வளவுதான்.

"ஆனால் அம்பீ, இப்போ வரவரத் தள்ளல்லேடாப்பா. சகுந்தலையே குடம் ஜலத்தை மலைமேல் கொண்டு போய் வைக்க வேண்டியிருக்கு. ஒரொரு சமயம் நீயும்தான் கை கொடுக்கறே. என் பாட்டன் முப்பாட்டன் நாளிலிருந்து இதே மாதிரி தினேதினே மலையேறி சுவாமி தலைமீது கொட்டியிருக்கும் ஜலத்தைத் தேக்கினால் கரடி மலையே முழுகிப் போயிருக்கும். ஆனால் கண்ட மிச்சம் என்ன? இந்த விரக்திதான். விரக்தி என்பது என்னென்று நினைக்கறே? தோல்தடுமன்; குண்டு பட்டால் குண்டு பாயக் கூடாது. குண்டு தெறிச்சு விழனும்னு அர்த்தம். ரோசத்துக்கு முழுக்குன்னு அர்த்தம். பசிச்சவனின் பழம் கணக்கு, தரிசனம் தராத சிரமத்தின் ரிகார்டு; காலே தேய்ஞ்சாலும் போய்ச் சேராத ஊருக்கு வழி_"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/30&oldid=1126465" இலிருந்து மீள்விக்கப்பட்டது