உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா025


குருக்கள் பேச இன்று முழுக்கக் கேட்கலாம். பொழுது போவதே தெரியாது. பேச்சில் ஒரு கிண்டல், வார்த்தைகளினிடையிடையே ஸம்ஸ்கிருதம் தெளித்து பேச்சிலேயே இன்னதென்று இனம் தெரியா மணம் கமழும். தான் உள்பட உலகத்தையே எள்ளும் புன்னகையில், மேல்வாயில் முன்பற்கள் இரண்டு காணோம், ஏன் என்று காரணம் கேட்காமலே, தானே; "கீழே விழவில்லை. வயிற்றுள் இருக்கு " என்று அதிலும் ஒரு பொடி.

பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ஒரொரு நாள் அங்கேயே தங்கி விடுவேன்.

சிக்குப் பிடித்த அழுக்கு முண்டையவிழ்த்து நைவேத்யத்திலிருந்து, மாமி சாதத்தைக் கையாலேயே அள்ளி வைப்பாள். அரிசி மட்டரகம் சிவந்த ராசி. இரத்தத்தைக் கலந்தாற்போல், ஆறிப்போய் இலையில் சிலிர்த்துக் கொண்டு நிற்கும்.

“பயப்படாதே, சுவாமிக்கே இதுதான்! எதை எங்களிடமிருந்து வாங்கிக்கறாரோ அதைத்தானே அவருக்கு நாங்கள் திருப்பித் தர முடியும்!”

நடுவில் குருக்கள். நானும் சகுந்தலையும் மூவரும் சேர்ந்து ஃன்னா மாதிரி.

சாதம் போதாது. சகுந்தலையெழுந்து கையலம்பி வந்து மூலைப் பழையதைப் பிழிந்து வைப்பாள்.

பார்க்கத்தான் பயம். ஆனால் பசிக்கு ருசி. இப்போ நினைக்கிறேன். உப்பும் புளியும் பக்குவமாய்க் கூடினதால் மட்டும் ருசி கிட்டி விடுவதில்லை. அன்னமிட்டாரின் எண்ணமும் கலந்த ரஸவாதம்தான் நெஞ்சு நிறைகிறது.

மாமா வீட்டுச் சாப்பாட்டை இத்துடன் ஏணி வைத்துத்தான் பார்க்கணும். ஆள் போட்டு சமையல். சங்கரன் இட்டதுதான் சட்டம். தினம் ஒரு தேங்காயை உடைக்காமல், அவனுக்குச் சமைக்கத் தெரியாது. மாமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/31&oldid=1126471" இலிருந்து மீள்விக்கப்பட்டது