பக்கம்:அபிதா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 0 லா. ச. ராமாமிருதம்


வீட்டில் தினம் ஒரு கூட்டு, கறி இல்லாமல் சாப்பிடத் தெரியாது. ஒரு விருந்தாளியேனும் இல்லாத பந்தியே கிடையாது. ஆனால் என்னைக் காணோமே என்று உள்ளோடு கவலைப் படுவோர் யார்? மறுநாள் போனதும் திட்டுவதற்கு ஒரு சாக்காச்சு ஆனாலும்;

மாமாவுக்குப் பேச்சில் அலாதி தோரணை, ஏற்கெனவே ஊருக்குப் பெரிய மனுஷன். கடல்போல் வாசல் திண்ணையில்தான் அவர் கச்சேரி. காலைப் பிடிக்க ஒரு ஆள். என்னதான் அந்த வலது காலில் அப்படி ஓயாத ஒரு குடைச்சலோ! வேலை உண்டோயில்லையோ, உத்தரவுக்குக் காத்தவண்ணம் மார்மேல் கைகட்டிக் கொண்டு எதிரே சேவகம் இரண்டு ஆள். அவர் சொல்வதற்கெல்லாம் கூடவே தலையை ஆட்டவும் பல்லைக் காட்டவும், விஷயம் புரிந்தோ புரியாமலோ, மாமா முகம் பார்த்து, மனமறிந்து சிரிக்கத் தெரிந்து குஞ்சுத் திண்ணையில் மூணு மந்திரிகள்- அவ்வளவுதான். மாமாவுக்குக் களை கட்டிவிடும்.

“என்னடா குறவன் மாதிரி முழிக்கறே? சோத்தை வெச்சுண்டு எத்தனை நாழி ஐயர்வாளுக்குக் காத்துண்டிருக்கணுமோ தெரியல்லியே! தவிடு தின்கறத்துலே ஒய்யாரம் வேறேயாக்கும்! உன் மாமி உடம்பை, இரும்பாலே அடிச்சுப் போட்டிருக்குன்னு எண்ணமோ, உன் இஷ்டப்படி ஆட்டி வைக்க? எங்கே போயிருந்தே? என்னடா முணுமுணுக்கறே? என்னடா எதிர்த்துப் பேசறே? ஒஹோ அவ்வளவு தூரத்துக்கு ஆயிடுத்தா? ஒஹோ நெருப்பிலிருந்து எடுத்துவிட்ட கையைக் கடிக்கற பாம்பா?.

குஞ்சுத் திண்ணையிலிருந்து: "ஹி! ஹி! ஹீ!!!”

நான் பதில் பேசவே மாட்டேன். மாமா நல்லவர். கேள்வி கேட்பார்; ஆனால் பதில் எதிர்பார்க்கமாட்டார். மாமா ஸோ லோ! அவருக்கு அவர் குரல் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/32&oldid=1126477" இலிருந்து மீள்விக்கப்பட்டது