அபிதா O 27
மாமா பக்கத்தில் யானைத்தலை பெரிது ரயில்கூஜாவில் தீர்த்தம். அருகே எப்பவும் வெள்ளி வெற்றிலைச் செல்லம். உதட்டோரம் சாறு ஒழுகும். புகையிலைக் காட்டம் அவருக்கு ஏற்றபடி வாய்த்துவிட்டால் போதும், பேச்சின் ஜோரும் அலாதிதான். நானும் அவரும் பிட்டுக் கொண்டதே இதுபோல் புகையிலைக் குஷியில் அவருக்குப் பேச்சு வழி தப்பிப் போனதால்தான்.
அன்றும் இதேபோல் 'கோர்ட்'.
"என்னடா நினைச்சுண்டிருக்கே? எங்கேபோயிருந்தே? நான் ஒருத்தன் கேக்கறேன் இடிச்ச புளிமாதிரி வாயை மூடிண்டிருந்தால் என்ன அர்த்தம்? ஊம்? காது கேட்கத்தான் சொல்லித் தொலையேன்! என்னடி?- கரடி மலையா? ஒஹோ! குருக்கள் வீட்டில் குருகுல வாசமா? பகலெல்லாம் அங்கே குழையறது போதாதுன்னு ராத்தங்கவேறே ஆரம்பிச்சாச்சா? குதிர்மாதிரி பெண்ணை வீட்டில் வெச்சுண்டு குருக்கள்வாள் ப்ளான் என்ன போட்டிருக்கார்? 'உங்காத்துப் பையனுக்கும் என் பெண்ணுக்கும் கல்யாணம் ஆகல்லே. வாஸ்தவந்தான், அதனால் என்ன? வளைகாப்புக்கு நாள் வெச்சாச்சு, ஸீமந்தம் முறைப்படி உங்கள் வீட்டில் சொல்லக் காத்-"
பிறகு என்ன நேர்ந்ததென்று எனக்கே நிச்சயமான நினைவில்லை. எல்லாம் கோடழிந்த மாதிரிதான் இருக்கிறது. நான் பூமியை உதைத்துக் கொண்டு கிளம்பின நொடி நேரம் கால் பூமியைத் தொடவில்லை. ஆகாயத்தில் நீந்தின மாதிரியிருந்தது. அடுத்த நேரம் மாமாமேல் பொத்தென்று விழுந்தேன். ரொட்டிபோல் தொப்பை என் முழங்காலின் கீழ் மெத்தென்று அமுங்கியது.
“ஐயோ! ஐயோ!’
ஏக அமர்க்களம். ஆரவாரம். என் கண் இருட்டு.
(இத்தனை பேர் இருப்பதற்கு அதுகூட இல்லாவிட்டால் பிறகு என்ன இருக்கிறது?)