பக்கம்:அபிதா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 29


இல்லை என்று எனக்கே நான் நினைப்பில் கோரி கட்டிக் கொண்டு, கட்டடம் கண்டு பிரமித்து மகிழ்ந்து கொண்டிருக்கலாம்.

நெஞ்சைச் சோதித்துக் கொண்டால், டிக்கட் இல்லாமையால் பரிசோதகன் அங்கங்கே என்னை இறக்கி விடுகையில், ஆங்காங்கு வேற்றிடத்தின் திகைப்பில், பசி வேதனையில் கரடி மலையிலிருந்து என் வெளியேற்றத்துக்கு நான் குருக்கள் வீட்டையே காரணமாகக் கண்டு, சமயங்களில் கசந்ததுதான் உண்மை.

கரடிமலை மண்ணைக் காலினின்று இவ்வாறு உதறிய, பிறகு சகுந்தலையின் நினைப்பில் இப்போதுதான் திரும்புகிறேன்.

மனித இயல்புக்கு வ்யவஸ்தை ஏது?

ரயில் விட்டிறங்கி, ஒரு மாட்டு வண்டியைத் தேடிப் பிடித்துக் கூலிபேசி, பெட்டிபடுக்கை, மூட்டைமுடிச்சுகளை ஏற்றிக் கொண்டு, ‘லொடக்’ ‘லொடக்'கென்று ஆடி ஆடி வண்டி நகர்வதற்குள் வெய்யில் முதுகிலேறிவிட்டது. கண் விழித்ததிலிருந்து காப்பியை காணாது சாவித்திரிக்கு மண்டை பிளந்தது. முகமும் வாயும் கடுகடு சிடுசிடு.

ஸ்டேஷனிலிருந்து கரடிமலை, வயல் வரப்பில் கால்நடையாகவே மூணு மைலுக்குக் குறைவில்லை. வண்டிப் பாதைக் கண்டிப்பாய் அஞ்சு குறையாது.

கரடிமலைமேல் பெரிய குடைபோல் ஒரு கருமேகம் தொங்குகிறது. அதனடியில் திருவேலநாதர், அன்றிலிருந்து இன்று வரை, வேணுமானால் இனிமேலும் என்று வரையும் மாறாதவர்- ஏனெனில் அவர் எப்பவும் ஊமை.

சில சமயங்களில் மலையுச்சியில் காலைக்கும் மாலைக்கும் கூட வித்தியாசம் தெரியாது.

அன்றொரு நாள் மாலை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/35&oldid=1126484" இலிருந்து மீள்விக்கப்பட்டது