32 0 லா.ச.ராமாமிருதம்
சாவித்ரிக்கு இதெல்லாம் புதிது. வைத்த விழிமாறாது பார்க்கிறாள். வண்டி, பாதையின் மேடு பள்ளங்களில் குடிகாரன் போல் தள்ளாடிச் செல்கிறது.
சின்னஞ் சிறு சிட்டுக் குருவி- உடல் பூரா நீலமைக் கறுப்பு, மூக்கு சிவப்பு, வால் நீளம். சொல்லாமலே வீங்கி வெடித்துவிடப் போகும் ரஹஸ்யம்போல் மார்மூட்டிக் கொண்டு புதருக்குப் புதர், செடிக்குச் செடி, மலருக்கு மலர் தொட்டுத் தன் ரஹஸ்யம் சொல்ல, தன்னைப்போல் ஒன்றை இல்லை. எதையேனும் ஒன்றைத் தேடிப் பறக்கின்றது. கூட என் மனம் இருப்புக்கொள்ளாமல் தவிக்கிறது.
புது இடத்தைக் காணும் வியப்பைக் காட்டிலும் பழைய இடம், பழகின இடம் திரும்பும் உள்ளக் கிளர்ச்சி தாங்க முடியவில்லை. தேங்கிவிட்ட நினைவுகள் கொந்தளிப்பு கண்டு உணர்ச்சிகள் ஒருங்கே அழுத்தும் நிலை முற்றிலும் இன்பம் என்று சொல்வதற்கில்லை. திரும்பியே வந்திருக்க வேண்டாமோ? என்று கூட சித்தம் சலிக்கிறது. ஆயினும் ஒரு எண்ணம்- ஒரே எண்ணம்- நீர்த்துப்போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்து ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக்கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாகி என்னைத் தன் முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே.
இப்போது சகுந்தலை எப்படியிருப்பாள்?
ஆனால் அவள் மறந்தால் என்ன, நினைவில் வைத்துக் கொண்டிருந்தால் என்ன? அதனால் நாங்கள் அடையப்போகும் பயன் என்ன? அவள் என்னை மறந்தாலும் அவளைக் குற்றம் கூற எனக்கென்ன வாய் இருக்கிறது? ஆனால் இப்படி ஒருதரம் மனம் தனக்குப் புத்தி சொன்னா