பக்கம்:அபிதா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 0 லா. ச. ராமாமிருதம்


பண்ணினையே, எனக்குப் புடிச்ச புளிப்பு மிட்டாய் வாங்கிக் கொடுத்தியே! ‘அம்மாகிட்டே சொல்லாதேன்னு கெஞ்சினையே! நான் சொல்லுவேனாடா அம்பி! ஆனால் அடி வலிச்சால் அழாமல் இருக்க முடியுமா?

சக்கு. அடுத்தாப்போலேயே நீ பெரியவளாயிட்டே.

அம்பி நீ நாலு நாளைக்குத் திகைப்பூண்டு மிதிச்ச மாதிரி ஊமைக் காயம் பட்ட மாதிரி, வாயடைச்சுப் போய்க் கண்ணாலே என்னைத் தேடித்தேடித் தவிச்சுட்டுப் போனையே! எனக்கு மறைப்புக் கட்டியிருந்த ஒலைத் தடுக்கின் பின்னாலிருந்து பார்த்தேன்; உன்னைப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பா வந்தது. ஒரு பக்கம் பரிதாபமாயிருந்தது. ஆனால் அதுக்குப்புறம் எனக்கே ஏக்கம் பிடிச்சுப்போச்சு. அம்பி. அம்மா சட்ட திட்டம் பண்ணிப்பிட்டா. நீ இனிமேல் யாரோடும் இஷ்டப்படி பேசிண்டு கூத்தடிக்கப்படாது. உன் இஷ்டத்துக்குக் கூடத்து வாசல்லே வந்து நிக்கப்படாது'ன்னு திடீர் திடீர்னு நினைக்காத சமயத்தில், எதிர்பாராத இடத்தில், எதிரே, பின்னாலிருந்து, பக்கத்திலிருந்து அம்மா புதையல் காக்கும் பூதம்போல் திடீர் திடீர்னு முளைக்கறப்போ 'பகீர் பகீர்’னு வயத்தைச் சுருட்டறது. குத்தமில்லாத இடத்தில் என்ன குத்தம் பண்ணினேனோன்னு சதா திகில்; வீடு ஜயிலாயிடுத்து. வீடென்ன, இந்தப் பரந்த பூமியையே அம்மா சுவரைப் போட்டு வளைச்சுப்பிட்டாள். என்னவோ பாதி புரிஞ்சதும் புரியாததுமா ஏதோ சொல்றா பொண்ணைப் பெத்துட்டேனே! உனக்கென்ன, உன் வேளை வந்ததும் வயத்தைவிட்டுக் கழிஞ்சுட்டே. நீ விட்ட இடத்தில் நெருப்பை வெச்சுக் கட்டிண்டிருக்கேனே!’ என்கிறாள்.

அப்புறம் அப்பா, ‘இதென்ன அம்பி நம்மாத்துப் பையன்! குழந்தைகளை இப்படி ஹிம்ஸிச்சா என்னதான் ஆறது எங்கேதான் போறது? உன் அமுலைப் பார்த்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/40&oldid=1126494" இலிருந்து மீள்விக்கப்பட்டது