பக்கம்:அபிதா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 0 லா. ச. ராமாமிருதம்


தள்ளாமை வந்துவிட்டது. ஒற்றைக்காலில் நொண்டிக்கொண்டு நிற்கிறது.

நொண்டிக் குருக்கள் வீடு நொண்டி வீடு. இப்போ சக்கு எப்படி இருப்பாள்?

உடல் ஒரு கூடுஎனில் இதயம் அதனில் குருவி. திடீர் திடீர் திகில் திகில் தொண்டை வரை பறந்து பறந்து மார்த்தட்டில் விழுந்து விழுந்து எழுகையில் அடிவயிறு பகீர் பகீர்- அதன் சிறகுகளின் படபடப்பு என் நெஞ்சின் துடிதுடிப்பு. குருவி கொத்து கொத்தெனக் கொத்திக் கொத்தியே மார்ச்சுவர்கள் பிளந்து விடும்போல் வலி விண் விண் விண்- ஒரு கையால் மார்பை அழுத்திக் கொண்டே வண்டியை விட்டிறங்குகிறேன்.

வாசற்கதவு மூடியிருக்கிறது. அந்தக் காலத்துத் தேக்கு. சுவர் விட்டுக்கொடுத்துவிட்டாலும் அது இன்னும் விட்டுக் கொடுக்கவில்லை. பல்லிருக்குமோ இல்லையோ விசுவாசம் மாறாமல் நிலைவாசலைக் கவ்விக்கொண்டிருக்கிறது. நடுச்சட்டத்தில் முழிமுழியாகப் பித்தளைக் குமிழ்கள்.

இப்போ சக்கு எப்படி இருப்பாள்?

நிதமா நிதம்மா நிதம்ம்ம்ம்- ம்ம்ம்ம்ம்ம்ம்

செவியோரம் ரீங்காரம் புவனத்தையே வளைத்த ஓங்காரம். இதிலிருந்து இந்த நியமனத்துள் எத்தனை சக்கு, எத்தனை 'நான்', எத்தனை சாவித்ரி, எத்தனை எத்தனை-

-ஆனால் சக்குவின் ஸ்வரஸ்தானங்களைப்பற்றி, எதுவும் சொல்வதற்கில்லை. கதவு திறந்ததும் "அம்பி வந்தையா?" என்று ஒரே விளிப்பில், கூடத்தில் சிதறிக்கிடக்கும் பெரும் குப்பைகளை ஒரே கைவீச்சில் ஒதுக்கித்தள்ளுவதுபோல், இத்தனை வருடங்களில் கோடுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/42&oldid=1126500" இலிருந்து மீள்விக்கப்பட்டது