பக்கம்:அபிதா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 0 லா. ச. ராமாமிருதம்

உடைந்த பீரோ, புளிப்பானை, தையல் இலைக்கட்டு, கண்டான்முண்டான்களின் நடுவே உறைகிழிந்து, எண்ணெய்ச் சிக்குப்பிடித்துக் கட்டியும் முட்டியுமாய்ப் பஞ்சு கட்டிப்போன தலையணைகள், கிழிந்த பாய், ஒலைத்தடுக்கு, பல நாள் ஓதத்தின் வாடை- இந்த உலகத்தை இதற்குமுன் சாவித்ரி எங்குப் பார்த் திருக்கிறாள்?


மாமி பறந்து பறந்து வேலை செய்கிறாள். புழக்கடைக்குப் போவதும் கொத்தமல்லியை உருவிக்கொண்டு வருவதும் மறந்தாற்போல் திரும்பவும் குண்டு குண்டென குலுங்கக் குலுங்க ஒடிப்போய் இரண்டு பீர்க்கங்காய்களைப் பறித்து வருவதும், இடையிடையே வாசற்பக்கம் போய் அங்கே யார் இருக்கிறார்களோ இல்லையோ- “ஏ அஞ்சலை! ஏ அழகம்மே! ஏ பாஞ்சாலே!” என்று ஏதேதோ பேர்களை உரக்கக் கூவுவதும்- (தயிருக்குப் போலும்!) - “ஏன் இந்தப் பிராம்மணனை இன்னும் காணோம்? ஊசியும் தட்டானும் உருண்டோடிப் போயிட்டான்னு அழைச்சுண்டு வரப் போனதையும் அட்ரெஸ் காணல்லே!” என்று அங்கலாய்ப்பதும்-

அவள் கணவன்தான் என்னை முன்னால் அடையாளம் கண்டு கொண்டான். அவனோடு பேச்சு கொடுத்த பின்னர் எனக்கும் ஞாபகம் வந்தது. அந்த நாளில் இந்த வீட்டுக்கு இரண்டு அல்லது மூணு மாதங்களுக்கு ஒரு முறை ஸைக்கிளில் வந்து ஒரிருவேளை தங்கிவிட்டுப்போவான்.நொண்டிகுருக்களுக்கு ஒன்றுவிட்ட-“இல்லை, எட்டு விட்டு எட்டி விட்ட (இது அவர் பாஷை) மருமான். எங்கள் குலமே நசித்த குலம் என்பதற்கு இந்தப் பையனும் ஒரு அத்தாக்ஷி”என்று உடனே ஒரு கதை சொல்வார்.

இவனுக்கும் வர்க்க அடையாளம் முற்றிலும் விட்டுப் போகாமல், மூக்கின் மொண்ணையில், கண்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/46&oldid=1126792" இலிருந்து மீள்விக்கப்பட்டது